இன அழிப்பு தொடர்பான உண்மையைக் கண்டறியும் பணிக்குழுவொன்றை நியமிக்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு, நேற்றைய தினம் (15) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பேச்சேலெட்டுக்கு கடிதமொன்றை அனுப்பி இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
ஐநா மனித உரிமை பேரவையின் 48வது அமர்வு சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் கடந்த 13ம் தேதி ஆரம்பமாகி நடைபெற்ற வருகின்றது. இலங்கை தொடர்பில் மனித உரிமை பேரவையின் ஆணையாளர், கடந்த 13ம் தேதி வாய்மூல அறிக்கையை சமர்ப்பித்திருந்ததுடன், அதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் கடந்த 14ம் தேதி பதிலளித்திருந்தார்.
இலங்கை அரசின் செயற்பாடுகள் கவலையளிக்கும் விதத்தில் உள்ளதாக மனித உரிமை பேரவையின் ஆணையாளர் கருத்துரைத்த போதிலும், அதனை இலங்கை வெளிவிவகார அமைச்சர் நிராகரித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு, ஐநா மனித உரிமை பேரவையின் ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
இலங்கை போரின்போது காணாமல் ஆக்கப்பட்டோர்: ஐ.நாவை நாடும் உறவினர்கள்.
(நன்றி BBC TAMIL)

























