இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான சந்திப்பு வெற்றியளிக்காத பட்சத்தில் அரசுக்குள் இருந்து சுயாதீன குழுவாக செயற்பட கட்சித்தலைவர்கள் சிலர் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabhaya Rajapaksha) நாடு திரும்பியதன் பின்னர், அவருடன் தீர்க்கமான பேச்சு நடத்துவதற்கு ஆளுங்கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
கெரவலப்பிட்டி மின் நிலைய உற்பத்தி நடவடிக்கைகளை அமெரிக்காவுக்கு வழங்கிய ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட வேண்டுமென அமைச்சர்கள் விமல் வீரவங்ச(Wimal Weerawansa), வாசுதேவ நாணயக்கார(Vasudeva Nanayakkara) உட்பட்ட பிரமுகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட பிரதமருடனான சந்திப்பில், நிதியமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksha) அளித்த விளக்கங்கள் திருப்தியானதாக இல்லை என்பதால் ஜனாதிபதியுடன் சந்தித்து பேச பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும் பங்காளிக் கட்சிகளின் இடையூறு அடிக்கடி வருவதால் , அதற்கு முடிவொன்றை காணும் வகையில் ஆளுங்கட்சி உயர்மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அதன் முதற்கட்டமாக, ஆளுங்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை இராஜினாமா செய்யவைத்து , வெளியில் உள்ள முக்கிய பிரமுகர்களை உள்வாங்குவது, அமைச்சரவையில் மாற்றங்களை செய்வது உட்பட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும் ஜனாதிபதியுடான சந்திப்பு வெற்றியளிக்காத பட்சத்தில் அரசுக்குள் இருந்து சுயாதீன குழுவாக செயற்பட கட்சித்தலைவர்கள் சிலர் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
(நன்றி TAMIL WIN)