நாட்டின் ஆட்சியாளர்கள், ராஜபக்ச என்ற பெயரைச் சீரழித்துள்ளனர். கொழும்பு துறைமுகத்தில் உள்ள 13 ஏக்கர் நிலப்பரப்பைச் சீன நிறுவனத்திற்கு விற்பதற்கான வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி உடனடியாக நாராஹேன்பிட பொருளாதார மத்திய நிலையத்திற்குச் சென்று அரிசி பிரச்சினையைத் தீர்ப்பதற்காக முதல் வர்த்தமானி அறிவித்தலை விடுத்தார். அதுவே கோட்டாபய ராஜபக்ச பின்னோக்கி சென்ற வர்த்தமானியாகும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய பத்து அம்ச கொள்கைத் திட்டத்தை முன்வைத்தார். ஆனால் தற்போது மக்கள் அவற்றோடு அவரையும் விரட்டியடிக்கின்ற நிலையில் இருக்கின்றார்கள். அதில் முதலாவது அம்சம் பாதுகாப்பு சம்பந்தமானது.
இரண்டாவது சீரமைக்கப்படாத நட்பு ரீதியான மற்றும் வெளியுறவுக்கொள்கையாகும். யுகதனவி எரிசக்தி நிலையம் நடுராத்திரியில் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. அத்துடன் அமைச்சரவையில் இருக்கின்ற எரிசக்தி அமைச்சருக்குக் கூட இது தெரியாமல் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றது.
இந்த ஒப்பந்தத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, விசேட செயற்றிட்ட அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோரே கைச்சாத்திட்டுள்ளனர். இதில் உள்ளடங்கிய விடயங்கள் அவர்களுக்கு மாத்திரமே தெரியும்.
எதிர்காலத்தில் பிறக்கின்ற குழந்தையொன்றுக்குக் கூட ராஜபக்ச என்று பெயர் சூட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திறைசேரியிடம் காணப்பட்ட 50 வீத உரிமத்தில் 40 வீதம் இதன்போது விற்கப்பட்டுள்ளது. தற்போது கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா? கொழும்பு துறைமுகத்தில் உள்ள 13 ஏக்கர் நிலப்பரப்பைச் சீன நிறுவனத்திற்கு விற்பதற்கான வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றன.
இந்தியாவுக்கு மேற்கு முனையம் வழங்கப்படுகின்றது என்றவுடன்,சீனாவைச் சமாளிப்பதற்காக இந்த நிலப்பரப்பை வழங்குவதற்கு முயற்சிக்கின்றார்கள். இது தானா வெளிநாட்டுக் கொள்கை. நாட்டையும், நாட்டு வளத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறியவர்கள் இப்படி தானா நாட்டைப் பாதுகாக்கின்றார்கள்? என தலதா அத்துகோரல கேள்வி எழுப்பியுள்ளார்.
(நன்றி TAMIL WIN)