செயலிழந்துப்போயுள்ள ஜனாதிபதி நாட்டுக்கு தேவையா?

அரிசி ஆலை உரிமையாளர்களும் , கம்பனிக்காரர்களும் நாட்டை ஆளுகின்றனர்.அரசாங்கம் செயலிழந்துப்போயுள்ளது! ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரமும் செயலற்றுப்போயுள்ளது! இப்படியான ஜனாதிபதி நாட்டுக்கு தேவையா? அமைச்சரவை தேவையா? என்று ஜேவிபி கேள்வி எழுப்பியுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekhar) இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

இன்று இந்நாட்டில் பெரும் வினாக்குறியாகவிருப்பது ஜனாதிபதியினதும் அமைச்சரவையினதும் நலனா? அல்லது மக்களின் சீவனோபாய நலனா? என்பதாகவேயுள்ளது. தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அளித்திருந்த வாக்குறுதிகளை முற்றுமுழுதாக கைவிட்டிருக்கின்றதென்றே கூறவேண்டும்.

விவசாயத்துக்கு உரம் இலவசமாக வழங்குவோம் எனக் கூறி விவசாயிகளின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் தற்போது அவ்வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றியுள்ளார்கள். Gas கேஸ் பாவனையாளர்களுக்கு 100 ரூபாய் மானியம் தருவோம் என்றார்கள். அதையும் தரவில்லை. இன்று லிட்ரோ கேஸ் 2750 ரூபாவாக அதிகரித்து மக்கள் தலையில் மண்ணை வாரிப்போட்டிருக்கிறார்கள்.

கேஸ் விலை அதிகரிப்போடு அதனோடு சார்ந்த அனைத்து உற்பத்திப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். அதுவும் மக்கள் மீது இடிமேல் இடியை வீழ்த்துகின்ற செயலாகும்.

எண்ணெய் விலையை அதிகரிக்கமாட்டோமெனவும் உலகச் சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கின்றபோது எங்களால் உருவாக்கப்பட்டுள்ள எண்ணெய் கட்டுப்பாட்டு நிதியத்தில் 20 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்குவோமெனக் கூறியவர்கள், நேற்று முதல் நாள் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் மீண்டும் பெற்றோல் 13 ரூபாவாலும், டீசல் 33 ரூபாவாலும் அதிகரிக்க வேண்டுமெனக் கேட்டுள்ளார்கள்.

இப்படியாக எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்குமானால், பனையிலிருந்து விழுந்தவனை மாடு மிதித்த கதையாக மக்கள் மிதிக்கப்படப்போகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நல்லாட்சி அரசு அதிகாரத்தில் இருந்தபோது அன்று எதிரணியிலிருந்த மகிந்த ராஜபக்ஷ, கேஸ் (புயள) இருக்கிறதா? விலைக்குறைவா? மரக்கறிகளின் விலை எப்படி? தேங்காயின் விலை எப்படி? இப்போது சுகமாக இருக்கிறதா? என்றெல்லாம் அன்றைய அரசாங்கத்தை எள்ளி நகையாடியிருந்தார்.

ஆனால் இன்றைய ராஜபக்சக்கள் ஆட்சியில் இடம்பெற்றுக்கொண்டிருப்பதென்ன? சகல உணவுப் பொருட்களினதும் விலைகள் அதிகரித்துள்ளன. இலஞ்சம், ஊழல், மோசடி என்பவை அசாதாரணமான நிலையில் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கின்றன.

4000 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான சீனி மோசடி இடம்பெற்றுள்ளது. அரச கணக்காய்வு பிரிவே இம்மோசடியை அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த வருடம் அக்டோபரில் 50 ரூபாவாக இருந்த சீனிக்கான வரியை 25 சதமாக குறைக்கப்பட்டு பிரதானமான கம்பனிகளிடம் ஒப்படைத்துமிருந்தது. இறக்குமதிச் செய்யப்பட்ட சீனியில் 40 வீதம் விலமா கம்பனியே இறக்குமதி செய்துள்ளது. அப்படியானால் 4000 கோடி ரூபாவில் 40 வீதத்தை அந்தக் கம்பனியே கபளீகரம் செய்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவின் நண்பரும், சங்கரிலா ஹோட்டல் முதலாளியும், ட்டலி சிரிசேன எனப்படும் அரிசி ஆலை உரிமையாளருமே இன்று பொருட்களின் விலைகளை நிர்ணயிப்பாளர்களாகவுள்ளனர். அரசி விலையின் நிர்ணயிப்பு நாட்டிலுள்ள அரிசி ஆலை உரிமையாளரிடம் உள்ளதால் மக்கள் தமது சீவனோபாயம் தொடர்பில் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்து வருகின்றார்கள்.

இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களில் ஒரு சாரார் அரிசி ஆலைகளின் சொந்தக்காரர்களாக உள்ளனர். பாண் விலை 10 ரூபாவாலும், தேனீர் (டீ) விலை 10 ரூபாவாலும், அப்பத்தின் விலை 10 ரூபாவாலும், பிளேன் டீ விலை 05 ரூபாவாலும் மேலும் சகல பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும் போது நிறைவேற்று அதிகாரத்தை கொண்ட ஜனாதிபதியால் இதனை தடுத்து நிறுத்த முடியுமா? ஆனால் இதற்கேற்றவாறான சம்பள அதிகரிப்பும், வருமான அதிகரிப்பும் இடம்பெறாமையால் மக்களின் வாழ்வு மிகவும் இன்னல்கள் நிறைந்த ஒன்றாக ஆகியுள்ளது.

நாட்டின் பாரியளவிலான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், நாடு அதல பாதாளத்திற்குள் சென்றுக்கொண்டிருக்கின்றது. 20 பில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டு பணவீக்கமும் அதிகரித்து வட்டி வீதத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளமையால் விலைவாசி அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாத நிலையும் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், அரசாங்கம் குழப்பமடைந்த நிலையில் பல சித்துவிளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகின்றது. போதாகுறைக்கு அண்மையில் பண்டோரா பேப்பர்ஸ் கசிவின் மூலம் 160 டொலர் பில்லியன் மோசடியும் அம்பலமாகியுள்ளது.

தற்போதைய நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பல நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளவராவார். அவரை நமது நாட்டில் நிதியமைச்சராக நியமித்தமையானது கிண்ணஸ் சாதனையாகும். இவ்வாறான ஒரு மோசடிக்காரர் நிதியமைச்சராக இருக்கும்போது நாடு எவ்வாறான நிலையை எய்தும்? என இந்நாட்டு மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும் முதல் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்னும் போதம் கிடையாது.

ஊடகவியலாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய சகலரையும் பாதுகாப்போம் எனக் கூறினர். ஆனால் இன்றோ நிலைமை தலைக்கீழாக மாறியுள்ளது. இந்நிலையில், தான் 3இல் 2 பெரும்பானமை பலத்துடன் ஆட்சிக்கு வந்த ராஜபக்சர்களின் அரசாங்கம் நெருக்கடி நிலைக்குள் சிக்கியுள்ளதெனலாம்.

20ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து தற்காத்துக்கொள்ள முயற்சித்ததும் அதுவும் பயனலிக்கவில்லை. அதனால் தான் இன்றைய ஆட்சி தேவைதானா? இன்றுள்ள ஜனாதிபதி தேவைதானா? என மக்கள் நலன் விரும்பிகள் சிந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

கேஸ், பால் மா, விநியோகங்கள் தனியார் கம்பனிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனவே தான் மக்களைப் பாதுகாக்க முடியாத நிறைவேற்று ஜனாதிபதி நாட்டுற்கு எதற்கு? நாடாளுமன்றம் எதற்கு? அமைச்சரவை எதற்கு? 73 வருட ஆட்சியில் மக்கள் கண்ட சுகம் தான் என்ன? பயன்பாடுகள் தான் என்ன? இறுதியாக நடைபெற்ற தேர்தலின் போது 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த ராஜபக்ஷ அரசாங்கம் இந்த நாட்டின் வளங்களை அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்குத் தாரைவார்த்தும் வருகின்றது.

இந்த நிலையில் இந்த அரசாங்கத்தை இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உடன் வீட்டுக்கு அனுப்பாவிட்டால் எம்மீதும் நம்முடைய பிள்ளைகள் மீதும் நாமே மண்ணை அள்ளிப் போட்டு அழிப்போராக ஆகிவிடலாம்.

எனவே தான் இலங்கையில் 73 வருட ஆட்சி அதிகாரத்திற்கு நிரந்தரமாக சாவுமணி அடிக்க மக்கள் விடுதலை முன்னணியிடம் ஆட்சியை ஒப்படைப்பதே சரியான மார்க்கமாக இருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

(நன்றி  TAMILWIN)