இந்திய ராணுவத் தளபதியின் இலங்கை பயணம்: சீனாவை ஓரங்கட்டும் முயற்சியா?

இலங்கை தொடர்பில் கடந்த சில காலமாக இந்தியா அதிக கவனம் செலுத்தி வருகின்ற நிலையில், சமீப காலமாக இந்தியாவில் ராஜதந்திர ரீதியிலான முக்கிய பிரமுகர்கள் தொடர்ச்சியாக இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக இந்த மாத ஆரம்பத்தில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன ஷ்ரிங்லா, இலங்கைக்கான அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார்.

அவரது வருகையின் போது, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என பலரையும் சந்தித்திருந்தார்.

அவரது விஜயத்தின் பின்னர், சுமார் 3 முதல் 5 வருட காலமாக நடைபெறாதிருந்த மாகாண சபைத் தேர்தலை நடத்தும் அறிவிப்பை அரசாங்கம் விடுத்திருந்தது.

இந்தியாவின் அழுத்தமே, மாகாண சபைத் தேர்தல் நடத்துவதற்கு காரணம் என எதிர்கட்சிகள் கூறிய போதிலும், அந்த கூற்றை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மறுத்திருந்தார்.

இவ்வாறான பின்னணியில், இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கைக்கான விஜயம் நிறைவு பெற்று, சுமார் ஒரு வாரங்கள் கூட கடப்பதற்கு முன்னர், இந்திய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இலங்கைக்கான அதிகாரபூர்வ 5 நாட்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கை ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில் இந்திய ராணுவ தளபதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.

இந்திய ராணுவ தளபதி, இலங்கை ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு செயலாளர், ராணுவ தளபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளதாக ராணுவ ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

அத்துடன், இலங்கை – இந்திய கூட்டுப் பயிற்சியான மித்ர சக்தி பயிற்சிகளின் இறுதி கட்டங்களையும் அவர் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா (வலது) உடன் இந்திய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனேஇலங்கை ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா (வலது) உடன் இந்திய ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே

மேலும், ராணுவம் சார்ந்த சில முக்கிய நிகழ்வுகளிலும் அவர் கலந்துக்கொள்ளவுள்ளார்.

அதேபோன்று, இலங்கையில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவு தூபிக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய ராணுவ தளபதி, அங்கு அஞ்சலி நிகழ்வுகளிலும் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீன பாதுகாப்பு அமைச்சரின் பயணத்தின் பின் இந்திய ராணுவ தளபதியின் பயணம்

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மிகப் பெரிய நாடான இந்தியாவின் ராணுவத் தளபதி, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஜயமாக கருதப்படுகின்றது.

இந்திய ராணுவ தளபதிகள் இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்;.

இந்திய முன்னாள் ராணுவ தளபதியான ஜெனரல் பிபின் ராவத், 2018ம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்திய பாதுகாப்பு தரப்பு மாத்திரமன்றி, பல நாடுகளின் பாதுகாப்பு சார்ந்த முக்கியஸ்தர்கள் இலங்கைக்கான விஜயத்தை அண்மை காலமாக மேற்கொண்டிருந்தனர்.

இலங்கையில் கோவிட் நிலைமை தீவிரமாக காணப்பட்ட தருணத்தில், சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி சீன பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான தூதுக்குழு இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தது.

சீன பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான குழு, ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு தரப்பின் பிரதானிகள் உள்ளிட்டோரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது.

இந்த நிலையில், சீன பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்திற்கு பின்னர், உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் இலங்கைக்கு வருகின்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

சீன திட்டங்கள் இலங்கையில் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்திய இராணுவ தளபதியின் விஜயம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

ஏனைய நாடுகளிடமிருந்து போட்டி

புவிசார் அரசியல் விவகாரத்தில் இந்திய – இலங்கை நாடுகளுக்கு இடையிலான உறவுகளை, ஏனைய நாடுகளிலிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு இந்தியா தற்போது முயற்சித்து வருவதாக சௌதி அரேபியாவிற்காக முன்னாள் தூதுவரும், முன்னாள் ராஜதந்திர அதிகாரியுமான அஹமட் ஜாவீட் யூசுப் பிபிசி தமிழிடம் தெரிவிக்கின்றார்.

இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான நட்புக்கு, ஏனைய நாடுகளிடமிருந்து போட்டி காணப்படுவதாகவும், அதனை பாதுகாத்துக்கொள்ளும் நோக்கிலேயே இந்திய அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

அரசியல் ரீதியில் உறவுகளை மேம்படுத்துவதற்கு முயற்சிக்கு அப்பால் ராணுவ ரீதியில் ஏன் உறவுகளை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என பிபிசி தமிழ், அவரிடம் கேள்வி எழுப்பியது.

அஹமட் ஜாவீட் யூசுப்நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் திட்டத்தில் அரசியல் ரீதியான உறவுகளே வலுப்படுத்தப்படும் என்ற போதிலும், இலங்கையுடனான உறவை மேம்படுத்துவதில் ராணுவ ரீதியிலான உறவுகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் கோவிட் ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் ராணுவம் ஆதிக்கம் செலுத்தி வருவதாக அவர் கூறுகின்றார்.

இலங்கையில் ராணுவத்தின் ஆதிக்கத்தை கருத்திற் கொண்டு, இந்திய இராணுவ ரீதியிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு இந்தியா முயற்சித்து வருவதை அவதானிக்க முடிகின்றது என அவர் குறிப்பிட்டார்.

ராணுவ ரீதியிலான உறவுகள் மேம்படுத்தப்படும் பட்சத்தில், அது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதாகவே அமைகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

கசப்பான உறவை சீர் செய்யும் முயற்சியா?

பின்னடைவை சந்தித்திருந்த இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தெரிவிக்கின்றார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் கடந்த வாரம் நாட்டிற்கு வருகைத் தந்திருந்ததாகவும், தற்போது ராணுவ தளபதி நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அதேபோன்று, இலங்கையில், இரு நாட்டு ராணுவத்தினரின் பங்குப்பற்றுதலுடன் பயிற்சி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்தியாவுடன் காணப்பட்ட கசப்பான உறவை சீர் செய்யும் வகையிலேயே இவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்தியாவுடனான உறவை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில், இந்தியாவிற்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள மிலிந்த மொரகொடவின் முயற்சியினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் குறிப்பிடுகின்றார்.

வீரகத்தி தனபாலசிங்கம்சீனாவிற்கு நிகரான மூலோபய நலன்களை இலங்கையுடன் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவிற்கு உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

எனினும், சீனாவுடனான இலங்கையின் உறவை போல, இலங்கை இந்தியாவுடன் உறவை பேணாத போதிலும், இந்தியாவுடன் அண்மித்த உறவை பேண வேண்டும் என்ற உணர்வை இலங்கை ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ராஜதந்திர உறவுகளின் போது, இந்திய இராணுவத்தின் பிரவேசம் குறித்தும், மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

மூலோபய நலன்கள் என்ற விடயத்திற்குள், பொருளாதாரம், இராணுவம், புலனாய்வு, கடல்சார் பாதுகாப்பு விடயங்கள், அரசியல் என அனைத்தும் உள்ளடங்கும் என அவர் விளக்கமளித்தார்.

அனைத்து துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை துரிதகரியில் வலுப்படுத்துவதே, இவ்வாறான விஜயங்களின் நோக்கமாக காணப்படுகின்றது என மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தெரிவிக்கின்றார்.

இலங்கைஇந்திய ராணுவ தொடர்பு

இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையில் பல ஆண்டு கால ராணுவ தொடர்புகள் காணப்பட்டு வருகின்ற நிலையில், உள்நாட்டு போர் காலத்திலும் இந்தியா ராணுவத்தின் பங்களிப்பு இலங்கைக்கு இருந்து வந்தது.

இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் 1987ம் ஆண்டு இந்திய அமைதிப்படை நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த ராணுவ அமைதிப்படை இலங்கையில் தனது பணிகளை 1987ம் ஆண்டு ஆரம்பித்திருந்தது.

இவ்வாறு இலங்கைக்குள் பிரவேசித்த இந்திய அமைதிபடை 1990ம் ஆண்டு காலப் பகுதியில் நாட்டை விட்டு வெளியேறியது.

இவ்வாறான நிலையில், இந்திய ராணுவத்திற்கும், இலங்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் காலம் காலமாக இருந்து வருகின்றது.

(நன்றி BBC TAMIL)