நீண்ட இடைவெளிக்கு பின்னர், இலங்கையில் இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் முதல் தடவையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் கிழக்கு கடற்பரப்பில் வைத்து, இந்திய மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.

வெற்றிலைகேணி கடற்பரப்பில் 2 மீன்பிடி படகுகளில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த 23 மீனவர்களையும் அவர்களது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து காரைநகர் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

இந்நிலையில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சிவகுமார் மற்றும்; சிவனேசன் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு மீன்பிடி விசைப்படகுள்; நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்து இரண்டு படகுகளையும் அதிலிருந்த அகத்தியன், சிவராஜ், சிவசக்தி, சம்பத், கந்தன், முருகன், உள்ளிட்ட 23 மீனவர்களையும் கைது செய்து இலங்கை காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

இலங்கையில் இந்திய மீனவர்கள் கைதுபின்னர் மீனவர்களின் படகுகளை மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தினர். சிறைப்பிடிக்கப்பட்ட 23 மீனவர்களுக்கும் முதல் கட்டமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவு கிடைக்கும் வரை 14 நாட்கள் மீனவர்களை தனிமைப்படுத்த யாழ்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர் குறித்த அறிக்கையை மட்டும் ஊர்காவற்த்துறை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய இருக்கின்றனர்.

மார்ச் மாதத்துக்கு பிறகு

இலங்கையில் கோவிட் தொற்றின் 3வது அலை கடந்த ஏப்ரல் மாதம் பரவ ஆரம்பித்திருந்தது.

இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பில் இறுதியாக கடந்த மார்ச் மாதமே இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இவ்வாறு கடந்த காலங்களில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அனைத்து இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர், நேற்றைய தினமே இந்திய மீனவர்கள் முதல்தடவையாக கைது செய்யப்பட்டதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் சுகாதார நடைமுறைகளின் கீழ் நாட்டிற்குள் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வாகைப்பற்றப்பட்ட படகுகள் அல்லது கடற்படையினால் நடத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில், குறித்த மீனவர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

மீனவர்களை தனிமைப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள், சுகாதார தரப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

சுகாதார பிரிவின் ஆலோசனைகளுக்கு அமைய, மீனவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்த பின்னரே அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க கடற்படை நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் நாட்டிற்குள் அழைத்து வரப்படாமையினால், அவர் இந்தியாவின் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கடற்படை முன்னெடுத்து வருகின்றது.

(நன்றி BBC TAMIL)