எம்ஏசிசியை விசாரிக்கவும் மறுசீரமைக்கவும் செண்டர் சி4 வலியுறுத்து

சமீபத்திய மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து, சுயாதீன விசாரணை வேண்டுமென ஊழல் மற்றும் குரோனிசத்தை எதிர்த்துப் போராடும் மையம் (செண்டர் சி4) அழைப்பு விடுக்கிறது.

முன்னாள் மலேசிய வெளி புலனாய்வு அமைப்பின் (எம்.இ.ஐ.ஒ.) தலைமை இயக்குநர் ஹசனா அப்துல் ஹமிட் சம்பந்தப்பட்ட வழக்கில் கைப்பற்றப்பட்ட RM25 மில்லியன் முறைகேடு தொடர்பில், மூன்று மூத்த எம்ஏசிசி அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை அந்த என்ஜிஓ குறிப்பிடுகிறது.

இது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளில், ஓர் அதிகாரிக்கு எதிராக மற்றொரு விசாரணையைத் தூண்டியது, அதிர்ச்சியூட்டும் இந்தச் செய்தி பொதுமக்களின் கோபத்தைத் தூண்டியது.

“இந்த நாட்டில் ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கென நம்பப்படும் சுதந்திரமான நிறுவனங்கள் மீது பொதுமக்களின் நம்பிக்கையை இந்த வெளிப்பாடு முற்றிலும் அழித்துவிட்டது.

“நிதி தொடர்பான குற்றங்களை விசாரிப்பதில் பணிபுரியும் ஒரு ‘சுயாதீனமான’ நிறுவனம், மாநிலச் சட்டத்தால் தண்டிக்கப்படும் கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒன்றாக மாறினால், நாடு ஒரு செயலிழந்த அமைப்பாகிவிடுகிறது,” என்று சி4 ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எம்ஏசிசி சம்பந்தப்பட்ட சமீபத்திய பிரச்சினை, தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது, குறிப்பாக ஊழலை எதிர்த்துப் போராடும் பணிகளில் ஈடுபடுபவர்கள் குற்றச்சாட்டுகளில் சிக்கிக் கொள்ளும்போது.

கடந்த வியாழன் அன்று, ஜொகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தில், ஒரு தனிநபரிடம் – அவர் எதிர்கொள்ளும் வழக்கைத் தீர்ப்பதற்காக – RM40,000 மோசடி செய்ததாக, இரண்டு எம்ஏசிசி அதிகாரிகளுக்கு எதிராக அந்த என்ஜிஓ குற்றச்சாட்டுகளை எழுப்பியது.

“குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொண்டவர்களில் ஒருவர், குளுவாங் எம்ஏசிசியின் உதவி கண்காணிப்பாளர்!

“இரண்டு அதிகாரிகளும், நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே காத்திருந்த காருக்கு ஓடிய காட்சி எங்களுக்கு மிகவும் சங்கடமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது,” என்று அவர் மேலும் கூறினார்.

சி4 கடந்த ஏப்ரல் மாதம் மற்றொரு வழக்கை எழுப்பியது, அதில் இரண்டு வெவ்வேறு எம்ஏசிசி அதிகாரிகள் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சோஸ்மா) கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட நிக்கி கும்பல் சிண்டிகேட்டுடன் தொடர்பு வைத்திருந்ததற்தாக கைது செய்யப்பட்டனர், ஆனால் இறுதியில் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

“எம்ஏசிசி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளால் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் இப்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் உள் விசாரணைகள் மூலம் அதை நிச்சயமாக தீர்க்க முடியாது,” என்று அது மேலும் கூறியது.

எனவே, சி4 கீழ்க்காண்பவற்றை வலியுறுத்துகிறது :-

  • ஒரு சுயாதீன விசாரணை குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும் – எம்ஏசிசி மற்றும் காவல்துறையைச் சேர்ந்த நிதிக் குற்றவியல் நிபுணர்களையும் இரண்டு அமைப்புகளுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவர்களையும் உள்ளடக்கி.
  • நிதிக் குற்றத் தடுப்புக்கான தேசிய மையம் (NAFCC) எம்ஏசிசி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மீறல்களின் அதிகரிப்பை விசாரிக்க ஒரு சுயாதீன குழுவை அமைக்கும் செயல்முறையை முன்னெடுக்க வேண்டும்.
  • இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய விசாரணைகள் மற்றும் வழக்குகளை விரைவுபடுத்துங்கள்.
  • சட்ட அமைச்சர் வான் ஜுனைடி, எம்ஏசிசி சீர்திருத்தத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் (2015-இல் சி4 மற்றும் வழக்கறிஞர் மன்றம் வழங்கிய குறிப்பறிக்கையைப் பயன்படுத்தி), அதன் சுதந்திரத்தை உறுதிப்படுத்த எம்ஏசிசி-ஐ மறுசீரமைக்க வேண்டும்.
  • எம்ஏசிசி ஆலோசனைக் குழுவானது ஆணையத்தைப் பொறுப்பேற்க வேண்டும் மற்றும் சுயாதீன விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

“நமது நாடு மேலும் அழிவை நோக்கி செல்லும் முன், தற்போதைய நிலைமையை மேம்படுத்த சரியான நடவடிக்கைகளை எடுக்கவும்,” என்றும் அது கூறினார்.