இலங்கை போரில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த நிதியுதவி – வெடிக்கும் எதிர்வினை

இலங்கை உள்நாட்டு போரின் காரணமாக காணாமல் போனோர் தொடர்பிலான பிரச்னை, யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்றும் முடிவின்றி தொடர்கிறது.

யுத்தம் நிறைவடைந்த பின்னர், காணாமல் போனோர் தொடர்பில் பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தாலும், அதற்கான தீர்வு இன்று வரை கிடைக்கவில்லை.

இவ்வாறான பின்னணியில், வலிந்து காணாமல் போனோரின் உறவினர்கள் அன்று முதல் இன்று வரை தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்த போராட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவ்வப்போது, தலைநகரிலும் போராட்டங்களை நடத்த வலிந்து காணாமல் போனோரின் உறவினர்கள், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மறப்பதில்லை.

அரசாங்கங்கள் மாறினாலும், காணாமல் போனோரின் விடயத்திற்கு தீர்வு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், காணாமல் போனோர் அலுவலகம் பல மாவட்டங்களிலும் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும், அதற்கான தீர்வு அந்த அலுவலகத்தினால் வழங்கப்படவில்லை.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு குற்றஞ்சுமத்தப்பட்ட ஆட்சியாளர்களே தற்போது ஆட்சி பீடத்திலுள்ள நிலையில், அந்த ஆட்சியாளர்களிடமே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகளை தேடித் தருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

‘இலங்கை போரில் காணாமல் போன 20,000 பேர் இறந்துவிட்டனர்’ – கோட்டாபய ராஜபக்ஷ

‘போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டார்கள் என இலங்கை அரசு ஏற்றுக்கொள்கிறதா?’

இவ்வாறான பின்னணியில், காணாமல் போனார் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆளும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்றொழில் அமைச்சர்

வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் எதிர்வரும் சில நாட்களில் காணாமல் போனோரின் உறவினர்களை சந்தித்து, கலந்துரையாடல்களை நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்;.

காணாமல் போனோருக்கு விவகாரத்தில் நிதி ஒதுக்கிய அரசாங்கம்

பல்வேறு காரணங்களினால் காணாமல் போனோர் தொடர்பிலான விவகாரத்திற்காக எதிர்வரும் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில், அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

காணாமல் போனோர் விவகாரத்திற்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, 2022ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தை சமர்பித்து உரை நிகழ்த்திய போது கூறியிருந்தார்.

பசில் ராஜபக்ஷ, இலங்கை நிதியமைச்சர்

எனினும், இந்த நிதி காணாமல் போனோர் விவகாரத்தில் எந்த நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அன்றைய தினம் தெளிவூட்டல்களை வழங்கவில்லை.

இவ்வாறான நிலையில், வலிந்து காணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்வினையாற்றத் தொடங்கியுள்ளனர்.

வலிந்து காணாமல் போனோரின் உறவுகள் எதிர்ப்பு

காணாமல் போனோரின் உறவுகள் விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமே தவிர, நிதி தேவையில்லை என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் விவகாரத்தில் நீதி வேண்டும் என்பதை தவிர, நிதி தேவையில்லை என்ற விடயத்தை இந்த நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் தாம் தெளிவாக கூறியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பது கண்டறியப்பட வேண்டும் எனவும், அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.

இந்த கோரிக்கையை முன்வைத்தே, தாம் மழை வெயில் பாராது, வீதிகளில் இறங்கி போராடி வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

வரவு செலவுத்திட்டத்தில் 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையானது, தமக்காக ஒதுக்கப்பட்ட நிதி கிடையாது எனவும் அவர் கூறுகின்றார்.

காணாமல் போன உறவுகளை சாட்டாக வைத்துக்கொண்டு, தமது பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு வழங்குவதற்காகவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சுமத்துகின்றார்.

வரவு செலவுத்திட்டத்தில் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தாம் முழுமையாக நிராகரிப்பதாக அந்த சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.

மனித உரிமை செயற்பாட்டாளரின் கருத்து

டொமினிக் பிரேமனாதன்

காணாமல் போனோர் விவகாரத்தில் தீர்வொன்றை வழங்குவதை விடுத்து, காணாமல் போனோரின் உறவுகளுக்கு நட்டஈட்டை வழங்குவதை இலக்காக கொண்டே காணாமல் போனோர் அலுவலகம் செயற்பட்டுள்ளதாக சட்ட ஆலோசகரும், மனித உரிமை செயற்பாட்டாளரும், ஈ.ஏ.டொமினிக் பிரேமானத் தெரிவிக்கின்றார்.

காணாமல் போனோர் விவகாரத்தில் தாமும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேசத்திற்கு காண்பிக்கும் வகையிலான செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

காணாமல் போனோரை தேடி போராட்டங்களில் ஈடுபடும் உறவுகளில் பலர் தற்போது உயிரிழந்துள்ளதாகவும், இன்னும் சிறிது காலத்தில் ஏனையோரும் வலுவிழந்ததன் பின்னர் அரசாங்கம் இந்த விடயத்தை மூடி மறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் என அவர் குறிப்பிடுகின்றார்.

தாம் காணாமல் போனோரின் உறவினர்களை தேடி ஆராய முற்பட்ட போதிலும், அவர்கள் தற்போது இல்லை என அரசாங்கம் எதிர்காலத்தில் கூறும் நிலைமை ஏற்படும் என அவர் தெரிவிக்கின்றார்.

இந்த விடயத்தில் காணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்படுவது தேவையற்ற ஒன்று என கூறிய அவர், கிராம உத்தியோகத்தரின் ஊடாகவே இந்த விடயத்தை அரசாங்கம் கையாண்டிருக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியானது, எதற்கு பயன்படுத்துவதற்கு என்பது தெளிவூட்டப்படவில்லை என அவர் கூறுகின்றார்.

சர்வதேசத்தின் அழுத்தங்களை குறைக்கும் நோக்கிலேயே, அரசாங்கம் உள்நாட்டு பொறிமுறைகளை வெவ்வேறு வழிகளில் நடைமுறைப்படுத்தி வருவதாக சட்ட ஆலோசகரும், மனித உரிமை செயற்பாட்டாளரும், ஈ.ஏ.டொமினிக் பிரேமானத் தெரிவிக்கின்றார்.

அரசாங்கத்தின் பதில்

2022ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் காணாமல் போனோர் விவகாரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 300 மில்லியன் ரூபா, எதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது என்ற கேள்வி பலரது மத்தியில் நிலவி வருகின்ற பின்னணியில், பிபிசி தமிழ் அது குறித்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வினவியது.

காணாமல் போனோருக்கு தொடர்ச்சியாக காணப்படுகின்ற பிரச்னைகளுக்கு தீர்வை வழங்கும் வகையிலேயே இந்த நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.

காணாமல் போனோரின் உறவினர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அவர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து, அவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இலங்கை போர்

காணாமல் போனோரின் உறவுகள் வாழ்வாதார ரீதியிலும் வேறு விதத்திலும் நாளாந்தம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக கூறிய அவர், அவ்வாறான பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை தீர்ப்பதற்காகவே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

காணாமல் போனோர் விவகாரத்தில் நட்டஈட்டை வழங்கினால், அது போதுமானது கிடையாது என அவர் தெரிவிக்கின்றார்.

காணாமல் போனோர் விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கம் எந்த ரீதியில் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் விரைவில் எடுக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஐநா பொதுச் செயலாளரை கடந்த செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் சந்தித்த வேளையில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், காணாமல் போனோருக்கு மரண சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கை விரைவுப்படுத்துவதாகவும் ஜனாதிபதி, ஐநா பொதுச் செயலாளரிடம் உறுதியளித்திருந்தார்.

இவ்வாறான உறுதிமொழிக்கு பின்னரே, வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

BBC