டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்றொழில்
இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கை அகதிகள், தாய் நாட்டிற்கு மீள வருகைத் தர விரும்பினால், அதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.இலங்கை நாடாளுமன்றத்தில் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதை குறிப்பிட்டார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள்குடியமர்த்தப்படாமல் வாழ்ந்து வரும் மக்களை மீள்குடியமர்த்துவதற்காக 1259 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1,200 வீடுகளை நிர்மாணிப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிதித் திட்டத்தின் கீழ், இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கை அகதிகள், தாயகம் திரும்ப விரும்பினால், அதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.
நாட்டிற்கு வருகைத் தர விரும்புவோரை, நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடைமுறைகள் குறித்து, இந்திய அதிகாரிகளுடன் இராஜதந்திர ரீதியில் கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் − காங்கேசன்துறை இறங்குத்துறை அபிவிருத்திக்காக வரவு செலவுத்திட்டத்தில் 797 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த துறைமுகம் அபிவிருத்தி அடையும் பட்சத்தில், வட மாகாணத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இந்தியாவிருந்து நேரடியாக கொண்டு வர முடியும் என்றார் அவர்.
அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில், இலகுவாக கொள்வனவு செய்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
BBC

























