தாக்குதலில் இறந்த போலீஸ்காரர் காதர் அணிந்திருந்த சீருடை.
இலங்கையின் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள போலீஸ் நிலையத்தில் டிசம்பர் (24) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு போலீசார் உயிரிழந்தனர்.
குறித்த நிலையத்தில் பணியாற்றி வந்த – போலீஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் போலீசார் மூவர் உயிரிழந்தனர். காயமுற்று வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களில் ஒரு போலீஸ் உத்தியோகத்தர் பின்னர் உயிரிழந்தார்.
இதேவேளை, திருக்கோவில் போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெஹிகம மற்றும் போலீஸ் உத்தியோகத்தர் இருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதாவான் எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் இவர் ஆஜர்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் போலீஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர், மொனராகல மாவட்டத்திலுள்ள எத்திமல போலீஸ் நிலையததில் சரணடைந்தார். இருந்தபோதும் இவரை அம்பாறை மாவட்டத்துக்கு போலீஸார் அழைத்து வந்து, நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர்.
என்ன நடந்தது?
திருக்கோவில் போலீஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றி வந்த சார்ஜன்ட் தரத்திலுள்ள குமார எனும் போலீஸ் உத்தியோகத்தரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பிபிசி தமிழிடம் அங்குள்ள போலீசார் தெரிவித்தனர்.
நேற்று இரவு சம்பவம் நடந்தபோது போலீஸ் நிலையத்தில் சிலரே கடமையில் இருந்ததாகவும், சார்ஜன்ட் குமார என்பவர் – போலீஸ் நிலையத்தில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளியதாகவும் அங்குள்ள போலீஸ் உத்தியோகத்தர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிச் சூடு நடந்தபோது நிலையப் பொறுப்பதிகாரி அங்கு இருக்கவில்லை என்றும், இவ்வாறான ஒரு தாக்குதல் நடப்பதை அறிந்து கொண்ட அவர், தனது ஜீப் வண்டியில் ஓட்டுநருடன் போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்தபோது, அவர் பயணித்த வண்டியின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பிபிசியிடம் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.
உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர்
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் மூவர் உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது. போலீஸ் உத்தியோகத்தர்களான பிரபுத்த, நவீணன் ஆகியோரும் போலீஸ் ஓட்டுநர் துஷார என்பவரும் இவ்வாறு பலியாகினர்.
பின்னர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட காதர் எனும் போலீஸ் உத்தியோகத்தரும் உயிரிழந்தார்.
உள் நுழையத் தடை
இதேவேளை போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெஹிகம, போலீஸ் ஓட்டுநர் குமார் மற்றும் சார்ஜன்ட் கந்தசாமி ஆகியோர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிசிக்சை பெற்ற வருகின்றனர்.
நேற்றைய சம்பவத்தில் உயிரிழந்த பிரபுத்த சியம்பலாண்டுவ பிரதேசத்தை சொந்த இடமாகக் கொண்டவர்.
பிரபுத்தவுக்கு திருமணமாகி 06 மாதங்களே ஆகின்றன என்று, சக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கூறினார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த மற்றொருவர் அம்பாறை மாவட்டம் – பாண்டிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஏ. நவீணனுக்கு 30 வயது; திருமணமாகவில்லை. 2010ஆம் ஆண்டு அதாவது தனது 19ஆவது வயதில் போலீஸ் சேவையில் நவீணன் இணைந்து கொண்டார்.
டிசம்பர் (24) காலை வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. திருக்கோவில் போலீஸ் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நவீணன் உயிரிழந்து விட்டார்.
நவீணனின் தந்தை ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர். நவீணனுக்கு ஓர் அண்ணனும் தங்கையொருவரும் உள்ளனர்.
துப்பாக்கி சூடு நடத்தியவர் தப்பினார்
மேற்படி தாக்குதலை நடத்திய சார்ஜன்ட் குமார என்பவர், இந்தத் தாக்குதலை நடத்திய பின்னர், போலீஸ் நிலையத்திலிருந்த இரண்டு துப்பாக்கிகள் மற்றும் 19 துப்பாக்கி ரவைக் கூடுகளை எடுத்துக் கொண்டு, தனது சொந்த வண்டியில் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தப்பித்தவர் மொனராகல மாவட்டதிலுள்ள எதிமல பிரதேசத்தில் அமைந்துள்ள போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். எதிமல அவரின் சொந்த ஊர் என்றும், அங்குதான் அவரின் வீடு அமைந்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
ரி56 துப்பாக்கிகள் இரண்டு, தோட்டா ரவைக் கூடுகள் 19 – ஆகியவற்றுடன் மேற்படி நபர் சரணடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கான காரணம் என்ன?
திருக்கோவில் போலீஸ் நிலைய துப்பாக்கிச்சூடு.
துப்பாக்கிச் சூடு நடத்திய குமார என்பவர், தனக்கு விடுமுறை வழங்குமாறு நிலையப் பொறுப்பதிகாரியிடம் கோரியதாகவும் அதனை பொறுப்பதிகாரி மறுத்து விட்டதாகவும் – அதனால் அத்திரமடைந்து அவர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என்றும், திருக்கோவில் போலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் போலீஸ் உத்தியேகாத்தர் ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.தாக்குதலை மேற்கொண்டவர் ஏற்கனவே விபத்தொன்றில் பாதிக்கப்பட்டவர் என்பதால், மருத்துவ ரீதியாக அவருக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், அதற்கிணங்க கடமை நேரத்தில் சீருடை அணியாமலிருப்பதற்கான அனுமதி அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.”நேற்றிரவு குமாரவுக்கு பணி இல்லை.
பிரதான வாயிற் கதவடியில் போலீஸ் சார்ஜன்ட் கந்தசாமி கடமையில் இருந்தார். இதன்போது அங்கு வந்த குமார, கடமையிலிருந்த சார்ஜன்ட் கந்தசாமியை தள்ளிவிட்டு, அவரின் துப்பாக்கியைப் பறித்தெடுத்து, அந்தத் துப்பாக்கியால்தான் தாக்குதலை நடத்தியுள்ளார்” எனவும் அந்த போலீஸ் உத்தியோகத்தர் பிபிசியிடம் கூறினார்.”அவர் மதுபானம் பாவிப்பதில்லை. ஆனால் உளரீதியாகப் பாதிக்கப்பட்டவர் போலதான் காணப்படுவார்” என்றும் மேற்படி போலீஸ் உத்தியோகத்தர் தெரிவித்தார்.