பஷில் ராஜபக்ஷ அறிவித்த திடீர் சலுகைள்: நிபுணர்கள் கருத்து என்ன?

பஷில் ராஜபக்ஷ, இலங்கை நிதியமைச்சர்

இலங்கை பாரிய பொருளாதார பின்னடைவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில், அரசாங்கம் மக்களுக்கு திடீர் நிவாரண உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால், இது மக்களை நிலையற்றதாக்கலாம் என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, ஜனவரி 3ஆம் தேதி இரவு இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

இலங்கையிலுள்ள 14,50,450 அரசு ஊழியர்களுக்கு சம்பளத்திற்கு மேலதிகமாக 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக சம்பள முரண்பாட்டு பிரச்னை தீர்க்கப்பட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இந்த 5000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும்.

ஓய்வு பெற்ற 6,66,480 பேருக்கு, ஓய்வூதிய கொடுப்பனவிற்கு மேலதிகமாக மாதாந்தம் 5,000 ரூபா வழங்கப்படும்.

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்காக சமுர்த்தி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 3,500 ரூபா கொடுப்பனவிற்கு மேலதிகமாக, அவர்களுக்கு 1,000 ரூபா வழங்கப்படும்.

ஒரு கிலோகிராம் நெல்லுக்காக விவசாயிகளுக்க 75 ரூபா வழங்கப்படும்.

20 பர்ச்சஸ் நிலப்பரப்பில் வீட்டுத் தோட்டத்தை செய்வோருக்கு 10,000 ரூபா கொடுப்பனவொன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் 6 மாதங்கள் கடந்த பின்னர், மீண்டும் இதே தொகை வழங்கப்படும் என்றும் நிதியமைச்சரின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இது தவிர, மலையக மக்களுக்கு மாதாந்தம் 15 கிலோகிராம் கோதுமை மாவை கொள்வனவு செய்வதற்கு, தலா ஒரு கிலோகிராம் கோதுமை மாவை 80 ரூபாவிற்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை

கோதுமை மாவின் விலை தற்போது சந்தையில் 120 ரூபா முதல் 150 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையிலேயே இந்த நிவாரண அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து வகைகளுக்கு முழுமையான வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவுக்கு மேலதிகமாக 5000 ரூபா விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பஷில் தரும் விளக்கம்?

கோவிட் வைரஸ் பரவல் காரணமாக, உலகிலுள்ள அனைத்து நாடுகளும் பாரிய பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், இலங்கைக்கு அந்த தாக்கம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவித்திட்டத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பொருளாதார ரீதியில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை காரணமாக, நிதி அமைச்சு பாரிய பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

இவ்வாறான நிலையில், பாரிய பிரியத்தனங்களை மேற்கொண்டு, மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகின்றது.

மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய வகையில், பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான இயலுமை அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்க திட்டமிட்டதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.

பொருளாதார நிபுணரின் பார்வை

எம். கணேஷமூர்த்தி, பொருளியல் விரிவுரையாளர் – கொழும்பு பல்கலைக்கழகம்

தற்காலிக நிவாரணத்தை வழங்கி, நீண்ட கால அடிப்படையில் மக்களின் வாழ்விலை நிலையற்றதாக்கும் முயற்சியே, அரசாங்கத்தின் இந்த அறிவிப்பின் ஊடாக பார்க்க முடிகின்றது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.

சுமார் ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான நிவாரண பொதியொன்றையே அரசாங்கம் நேற்றைய தினம் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் வருமானம் மிக மிக குறைவாக மட்டத்தில் சென்றுக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், இப்படியான ஒரு நிவாரண அறிவிப்பு பொருத்தமற்றது எனவும் அவர் கூறுகின்றார்.

சரிந்துக்கொண்டு செல்லும் தமது செல்வாக்கை, தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக பார்க்கக்கூடியதாக இருந்தாலும், இது நடைமுறை சாத்தியமற்ற முயற்சி எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

”இந்த நிவாரணத்திற்கான பணம் எங்கிருந்து பெறப்பட போகிறது என்ற கேள்வி எழுகிறது. அதற்கு ஒரே வழி பணத்தை அச்சிடுவதுதான். அப்படி உள்நாட்டில் பணத்தை அச்சிட்டு வெளியிட்டு, பொதுமக்களுக்கு நிவாரணங்களை கொடுத்தால், பணவீக்கம் பல மடங்காக அதிகரிக்கும்” என கணேஷமூர்த்தி கூறுகின்றார்.

அரசாங்கம் இதனை தெரிந்து செய்கின்றதா? தெரியாமல் செய்கின்றதா? என ஒன்றுமே புரியவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

நாடு பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்பை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும் தருணத்தில், இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து வகைகளுக்கு முழுமையான வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால், அரசாங்கத்திற்கான வருமானம் மேலும் குறைவடையும் அதேவேளை, நிவாரணம் வழங்குவதன் ஊடாக அரசாங்கத்தின் செலவு பல மடங்காக அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

இலங்கை அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளுடன் தொடர்புடைய பொருளியல் நியாயப்படுமொன்று கிடையவே கிடையாது என அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறான பொருளாதார பாதிப்பு காணப்படுகின்ற தருணத்தில், விலைகளை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, இவ்வாறான பாரிய நிவாரண பொதிகளை வழங்கி மக்களை ஏமாற்றக்கூடாது என எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்.

”காசு கிடைப்பதை எண்ணி மக்கள் சந்தோஷப்படலாம். ஆனால் பொருளாதாரம் என்று பார்க்கும் போது, அது மிக மோசமானதாக இருக்கும். ஒரு பில்லியன் டொலரை ஏதாவது ஒரு நாடு அன்பளிப்பாக வழங்குமாக இருந்தால், அதை இப்படி செலவிடுவது பரவாயில்லை. ஆனால், கடனை பெற்றோ அல்லது பணத்தை அச்சிட்டோ இவ்வாறான நிவாரணத்தை வழங்கும் போது அது எந்தவித பலனையும் ஏற்படுத்தாது” என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளர் எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார்