போரின் போது மருத்துவமனைகள் தாக்கப்பட்டன : ICRC

இலங்கை உட்பட உலக நாடுகள் சிலவற்றில் போரின் போது மருத்துவமனைகள் இலக்குகளாக இருந்ததாக அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விசயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

போரின் போது பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதும், காயப்பட்டவர்களை மற்றும் இறந்தவர்களை பரிமாற்றம் செய்யும் பணிகளில் ஈடுபடுவதே அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தின் பணி.

இந்தநிலையில் தாம் இலங்கை, சோமாலியா போன்ற நாடுகளில் போர்க்காலத்தில் பணியாற்றியபோது அங்கு மருத்துவமனைகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

கொலம்பியாவில் காயமடைந்த மக்கள் கொல்லப்பட்டனர். லிபியாவில் மருத்துவனை வாகனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அனைத்துலக  செஞ்சிலுவை சங்கத்தின் பணிப்பாளர் விவ்ஸ் டெக்காட் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் தாம் பணியாற்றிய 16 நாடுகளில் சுகாதாரச் சேவைகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டதாக டெக்காட் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துலக நியதியின்படி போரில் காயப்பட்ட மற்றும் நோய்வாய்ப்பட்ட பொதுமக்கள் மற்றும் போராளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படவேண்டும்.

எனினும் இலங்கை, சோமாலியா, ஈராக் போன்ற நாடுகளில் போர்காலத்தில் பணியாற்றிய மருத்துவப் பிரிவினர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீதும் மோசமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.