தமிழக மீனவர்கள் 55 பேரை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல லட்சம் மதிப்பிலான ஒரு மீன்பிடி விசைப்படகு அரசுடமை ஆக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டணத்திலிருந்து கடந்த டிசம்பர் மாதம் 18 மற்றும் 20ம் தேதிகளில் மீன்பிடிக்கச் சென்ற 56 தமிழக மீனவர்களையும் அவர்களது 8 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நெடுந்தீவு அருகே வைத்து கைது செய்து மீனவர்களை படகுடன் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதில் ஜெகதாபட்டிணத்தில் இருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 13 மீனவர்களில் ஒருவர் சிறுவர் என்பதால் அவரை தவிர்த்து எஞ்சியுள்ள 55 மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
மீனவர்களின் வழக்கு தொடர்ந்து மூன்றாவது முறை யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். அதேபோல் மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அதற்கான ஜிபிஎஸ் எண்ணை உறுதி செய்து வழக்கில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து நீதிமன்றத்தால் கேட்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் தயார் செய்த யாழ்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகள் சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 55 பேரை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீனவர்களின் வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதிகள் கஜநிதிபாலன் மீனவர்கள் 55 பேரையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மேலும் மீனவர்கள் பயன்படுத்திய 7 விசைப்படகுகளின் வழக்கு வரும் ஏப்ரல் மாதம் 1ந் தேதி விசாரணைக்கு வரும் எனவும் அந்த தேதியில் சம்பந்தப்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் எஞ்சியுள்ள ஜெகதாபட்டிணத்தை சேர்ந்த ஒரு படகின் உரிமையாளர் தற்போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு உள்ளதால் உரிமையாளருக்கு தெரிந்தே படகு எல்லை தாண்டி வந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து அந்த படகு மட்டும் அரசுடமையாகப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்ய 55 மீனவர்கள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 56 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு கொழும்பில் உள்ள மெருஹானா முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது