தமிழ்நாட்டு மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை ஏலம் விட தொடங்கிய இலங்கை அரசு

தமிழக மீனவர்களின் கடும் எதிர்ப்பை மீறி இலங்கை கடற்படை முகாம்களில் கைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள பல கோடி மதிப்பிலான தமிழக மீன்பிடி விசைப்படகுகளை இலங்கை அரசு இன்று காலை முதல் ஏலம் விடும் பணியை தொடங்கியுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல், இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் அரசுடைமையாக்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்திய அரசு இலங்கை அரசிடம் பேசி நல்லிணக்க அடிப்படையில் படகுகளை, தமிழக மீனவர்களிடம் திருப்பி ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டது அதன் அடிப்படையில், படகுகளை தமிழக மீனவர்களிடம் திருப்பி ஒப்படைக்கும் என்று இலங்கை அரசு அறிவித்தது.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல், தொடர்ந்து இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் தமிழக மீனவர்களால், இலங்கையில் தடுத்து கைபடுத்தப்பட்ட படகுகளை மீட்க முடியவில்லை. இதனையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி ஊர்காவல்த்துறை நீதிமன்றத்தில் யாழ்பாணம் மீன்’ வளத்துறை அதிகாரிகள் வழக்கு ஒன்று தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கில் இலங்கை அரசால் அரசுடைமையாக்கப்பட்டு நல்லிணக்க அடிப்படையில் தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள படகுகளை, தமிழக மீனவர்கள் திருப்பி எடுத்துச் செல்லாத காரணத்தால், இரவு நேரங்களில் மீன் பிடிக்கச் செல்லும் இலங்கை மீனவர்கள் விபத்துள்ளாவதுடன் இலங்கை கடற்படை வீரர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளதால், அந்தப் படகுகளை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி உடனடியாக படகுகளை ஏலமிட்டு, கிடைக்கும் பணத்தை விசைப்படகு உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தனர்.

ஆனால் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இலங்கை கடற்படை வசமுள்ள படகுகளை மீட்க தமிழக மீனவர்கள் இலங்கை செல்ல முடியாத சூழ்நிலையில், பயனற்று இலங்கை வசமுள்ள படகுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசிடம், பரிக்கபட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், விசைப்படகுகளுக்கு 5 லட்ச ரூபாயும், நாட்டு படகுகளுக்கு ஒரு லட்சத்தி 50 ஆயிரமும் இழப்பீடாக அறிவித்தது. இதனை அறிந்த மீன் வளத்துறை, இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை, இன்று முதல் வரும் 10ம் தேதி வரை அந்தந்த கடற்படை தளத்தில் வைத்து ஏலம் விட உத்தரவிட்டிருந்ததது. இதனையடுத்து இன்று காலை 9 மணி முதல் ஏலம் துவங்கி நடைபெற்று வருகிறது.

BBC