“இலங்கையில் 4 அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு” – ஒப்புக்கொண்ட நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ

இலங்கையில் நான்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, கோதுமை மாவு, பால் மாவு, சமையல் எரிவாயு மற்றும் சிமெண்ட் ஆகிய நான்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு காணப்படுகின்றது.

கோவிட் தொற்றுக்கு மத்தியில் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, நாட்டில் அந்நிய செலாவணிக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையே, இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட காரணமாக உள்ளது.

இந்த நான்கு அத்தியாவசிய பொருட்களை தவிர, ஏனைய அனைத்து பொருட்களும் சந்தையில் போதுமானளவு காணப்படுவதாக நிதி அமைச்சு தெரிவிக்கின்றது.

அத்தியாவசிய பொருட்களை தடையின்றி நுகர்வோருக்கு வழங்குவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழு, நேற்று (11) மாலை முதல் தடவையாக கூடியது.

குழுவின் தலைவரும், நிதி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தலைமையில் இந்த குழு கூடி, விடயங்களை ஆராய்ந்திருந்தது.

குறிப்பிட்ட ஒரு பொருளின் விலை, மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுப்பட்ட விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமையினால், நுகர்வோர் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நிதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

அத்துடன், வர்த்தக நிலையங்களில் விலை பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் தற்போது அமல்படுத்தப்படுவதில்லை என அமைச்சர் லசந்த அழகியவண்ண இதன்போது கூறியுள்ளார்.

இதனால், வியாபாரிகள், தமக்கு தேவையான விலைகளில் பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை பட்டியலையேனும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்கான திட்டமொன்றை வகுக்குமாறு, நிதி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து அத்தியாவசிய பொருட்கள் தொடர்பான அறிக்கைகளை, நுகர்வோர் விவகார அதிகார சபையின் ஊடாக பெற்றுக்கொள்ளும் திட்டமொன்றை அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

அதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி பிரச்னையானது, தற்காலிக பிரச்னை என கூறியுள்ள நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, அதனூடாக மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.