மின்சாரத் தடையினால் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பாதிப்பு

மின்சாரத் தடை காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்படுவதனால் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் பிரச்சினையால் இவ்வாறு நாடு முழுவதிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதாக ஒன்றியத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை மாணவர்களின் வாழ்க்கையின் தீர்மானமிக்க ஓர் திருப்பு முனை எனவும் இது குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். மின்சாரத் தடை காரணமாக மாணவர்களினால் தங்களது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்பொழுது பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் கணனிகள், கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு நவீன இலத்திரனியல் சாதனங்களை பயன்படுத்தி கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியில் நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவது மாணவர்களுக்கு பெரும் பாதிப்பினை உருவாக்கும் என ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tamilwin