பொதுக் கூட்ட மசோதாவை எதிர்த்தும் அது நிறைவேற்றப்படுவதைத் தடுக்கவும் வழக்காடுவதற்கு அனுமதி கோரி பாஸ் சமர்பித்த விண்ணப்பம் செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் உயர் நீதிமன்ற (முறையீட்டு, சிறப்பு அதிகாரப் பிரிவு) நீதிபதி ரோஹானா யூசோப், அந்த முடிவை அறிவித்தார்.
விண்ணப்பதாரர்களில் இருவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னும் முறையில் மக்களவையில் அந்த மசோதாவைப் பற்றி விவாதிப்பதற்கும் அந்த மசோதா நிறைவேற்றப்படுவதை தடுப்பதற்கும் போதுமான வாய்ப்புக்கள் அவர்களுக்கு இருந்ததாக விண்ணப்பத்தை நிராகரித்த ரோஹானா யூசோப் சொன்னார்.
அந்த மசோதா சட்டமாக மாற்றப்படுவதற்கான நடைமுறைகள் இன்னும் பாதி வழியிலேயே இருப்பதால் அந்த விண்ணப்பத்தைச் சமர்பிப்பதற்கு இன்னும் காலம் கனியவில்லை எனவும் நீதிபதி கூறினார்.
அது சட்டமான பின்னர் அதனுடைய சட்டப்பூர்வத் தன்மை பற்றி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்றார் அவர்.
“அந்த விவகாரம் மீது ஆணையிடுவது அல்லது தீர்வு வழங்குவது நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் நடைமுறைகளில் தலையிடுவதாகக் கருதப்படலாம். அத்துடன் அதிகாரப் பிரிப்பு கோட்பாட்டையும் அது மீறக் கூடும்.”
அரசாங்கத்துக்கு 8,000 ரிங்கிட் செலவுத் தொகை கொடுக்கப்பட வேண்டும் என்றும் ரோஹானா ஆணையிட்டார்.