விரைவில் பாரிய அரசியல் மாற்றம்…

அரசாங்கத்துக்குள் தற்போது பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த முரண்பாடுகளினால் மிக விரைவில் நாட்டின் நிர்வாகத்திலும் அரசியலிலும் பாரிய மாற்றம் ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவா தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் இந்த விடயங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக செயற்பட்டே வருகிறோம். ஆனால், பொருட்களின் விலையைக் குறைக்கவோ, எரிபொருளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யவோ எதிர்க்கட்சியால் முடியாது.

இருந்தபோதிலும் அரசாங்கத்தின் தவறான, பொறுப்பற்ற முகாமைத்துவத்தினால் அதன் விளைவுகளையும் சகல பிரச்சினைகளையும் மக்களே அனுபவித்து வருகிறார்கள்.

ஆட்சி இல்லாத இக்கட்டான சூழ்நிலையை நாடு சந்தித்துள்ளது. மக்களுக்குத் தேவையான எரிபொருளை நாட்டுக்கு கொண்டுவர முடியாதுள்ளது.

நாட்டின் எரிபொருள் இருப்பை இந்தியாவின் எரிபொருள் நிறுவனமே (ஐ.ஓ.சி.) நிர்வகிக்கிறது. இந்த அரசாங்கத்தால் பொருட்களுக்கான விலையை நிர்வகிக்க முடியவில்லை. சமையல் எரிவாயுவை நிர்வகிக்க முடியவில்லை.

மறுபுறம் அரிசி விலையை வர்த்தகர்களே நிர்வகிக்கிறார்கள். அரசாங்கத்தின் இயலாமை, தலைமைத்துவத்தின் பலவீனம் காரணமாகவே மக்கள் இன்று கஷ்டத்தை அனுபவித்து வருகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tamilwin