பி.ஆர்.என். ஜொகூர் | கோத்தா இஸ்கண்டாருக்கான மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வேட்பாளர் அரங்கண்ணல் இராஜூ எனும் அரா, ஜொகூரில், குறிப்பாக கோத்தா இஸ்கண்டார் பகுதியில் ஏற்பட்டுள்ள நதி மாசுபாடு மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த ஆலோசனைகளை முன்வைத்தார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பி.எஸ்.எம். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பி சுரேஷ் குமாரும் கலந்து கொண்டார்.
கோத்தா இஸ்கண்டார் பி.எஸ்.எம். வேட்பாளர் அரா, “இன்று நாம் சிந்திக்க வேண்டிய மற்றும் அரசியல் விவாதங்களுக்குக் கொண்டு வர வேண்டிய முக்கிய நிகழ்ச்சி நிரல்களில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் ஒன்றாகும்,” என்றார்.
“ஜொகூரில் நதி மாசுபாடு என்பது ஒரு புதிய விஷயம் அல்ல, அதுவும் அதிவேக மேம்பாடுகளைக் கண்டுவரும் கோத்தா இஸ்கண்டார் தொகுதி இந்தப் பிரச்சனையிலிருந்து கண்டிப்பாக தப்பிக்க முடியாது,” என்று அரா கூறினார்.
“இதற்கு முன்பு, பி.எஸ்.எம். நூசாஜெயா (தற்போது கோத்தா இஸ்கண்டார்) கிளைக்குச் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து பல புகார்கள் வந்துள்ளன.
“பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம், இந்த நதிகள் மாசுபடுவதால் பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரச் சிக்கல்கள் ஏற்படுவதைக் கண்டறிந்தோம். இந்த ஆறுகளில் மீன்பிடி தொழிலை நம்பி வாழ்ந்துவரும் மீனவர்களின் வருமானமும் வெகுவாகக் குறைந்துவிட்டது,” என அவர் சொன்னார்.
இதற்கிடையே சுரேஷ்குமார் கூறுகையில், “ஆறு மாசுபாடு பிரச்சனை மிக அதிகமாகவும் வேகமாகவும் நிகழ்ந்து வந்தாலும், அதற்கான தீர்வு நடவடிக்கைகள் மிகவும் சிறிய அளவிலும் மெதுவாகவும் நடப்பதால், அது மாசுப் பிரச்சனையின் தீவிரத்தன்மையுடன் பொருந்தவில்லை என்பதனை நாங்கள் கண்டறிந்துள்ளோம்,” என்றார்.
“நாங்கள் கவனித்த இன்னொரு விஷயம் ‘முற்றாக ஒழிக்கும்’ பிரச்சனை. மாசு ஏற்படும் போது, கண்காணிப்பு, விசாரணை மற்றும் வழக்குத் தொடரும் வழிமுறைகளில் மாசு படுத்தியவரே ஒரே குற்றவாளி
என்று விவரிக்கப்படும். இது மாசுபடுத்தியவரை ‘முற்றாக ஒழிக்கும்` ஒரு முயற்சியாகவே நாங்கள் காண்கிறோம். மாசுபடுத்துபவர் மீது வழக்குப்பதிவு செய்து தண்டம் விதிக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், நதி மாசுபாட்டின் உண்மையான காரணத்தை மறைக்க இந்த ‘அதிகப்படியான’ செயல் செய்யப்படுவதாகத் தெரிகிறது,” என்று சுரேஷ் கூறினார்.
“நதிகள் மாசுபடும் போது, மாசுபடுத்தியவர் மீது வழக்குத் தொடர்வார்கள், பத்திரிகைகளில் அவமானப்படுத்துவார்கள், ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் விமர்சிப்பார்கள், ஆனால் மாசுபாட்டிற்கு உண்மையான காரணம் என்ன என்பதை ஆய்வு செய்ய மாட்டார்கள்.”
நதி மாசுபாட்டிற்கு முக்கியக் காரணம் திட்டமிடப்படாத மற்றும் கட்டுப்பாடற்ற மேம்பாடுதான் என்கிறார் சுரேஷ்.
“ஒவ்வொரு முறையும் நதி மாசுபடும்போது நம்மிடம் சில விடை தெரியாத, விடை கிடைக்காத கேள்விகள் இருக்கும். உதாரணமாக, மாசு ஏற்படுவதற்கு முன் கண்காணிப்பு மற்றும் அமலாக்க முகமைகளின் பங்கு என்ன? மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு ஆற்றங்கரையோரம் கட்டிடங்களைக் கட்டி, கழிவுகளை நேரடியாக ஆற்றில் விடுவதற்கு எப்படி ஒப்புதல் கிடைத்தது? யார் ஒப்புதல் கொடுத்தது? செம்பனை தோட்டங்கள் வீடமைப்புத் திட்டங்களாக மாற்றப்படுவதற்கு முன், அத்திட்டத்தின் நிலைத்தன்மை குறித்து ஆய்வு நடத்தப்பட்டதா? மீறக் கூடாத நதி இருப்புக் கொள்கை
என்ன ஆனது? போலீஸ் விசாரணை மற்றும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் வழிமுறைகள் என்ன? உள்ளூராட்சி மன்றம் (பிபிதி), நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் திணைக்களம் (ஜே.பி.எஸ்.), சுற்றுச்சூழல் திணைக்களம் (ஜே.ஏ.எஸ்.) மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சு ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு எவ்வாறு உள்ளது? ஸ்கூடாய் ஆற்றின் நீர் தரத்தை மீட்டெடுக்க, ‘மலேசியாவின் ஒருங்கிணைந்த நதிநீர்ப் படுகை மேலாண்மை (IRBM)’ திட்டத்தால் ஏன் முடியவில்லை?” என அடுக்கடுக்கானக் கேள்விகளை சுரேஸ் முன்வைத்தார்.
“ஜே.ஏ.எஸ்.-ஆல் வெளியிடப்பட்ட 2019 மலேசிய சுற்றுச்சூழல் தர அறிக்கையில், ஜொகூரில் உள்ள 29 ஆறுகள் ‘நோய்வாய்ப்பட்டுள்ளதாக’ கூறுகிறது,” என்று சுரேஷ் கூறினார்.
“கடந்த ஆண்டு டிசம்பரில், ஒரு சுயாதீன அமைப்பான <em>ஓஷன் கிளீனாப்
, ஜொகூரில் உள்ள சுங்கை தெப்ராவை உலகின் 53-வது மிகவும் மாசுபட்ட நதியாகப் பட்டியலிட்டது. ஜொகூரில் நதியின் நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது,” என அவர் மேலும் சொன்னார்.
நதிகள் மாசுபாடு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, அது குறித்து மக்களுக்குக் குறிப்பாக, ஆற்றின் அருகே வாழும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பி.எஸ்.எம். கோத்தா இஸ்கண்டார் முன்மொழிந்தது.
அதுமட்டுமின்றி, நதி மேலாண்மையில் நடவடிக்கை எடுக்கக் கூடிய அதிகாரம், நதிகளை நிர்வகிக்கும் தரப்பினருக்கு உண்மையில் இருக்கும்படி செய்ய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதும் அவர்களின் முன்மொழிவுகளில் அவங்கும்.
“கிம் கிம் நதி மாசுபாடு போன்ற பிரச்சனைகள் மீண்டும் எழுவதை நாங்கள் விரும்பவில்லை” என்று அரா கூறினார்.
“எனவே, இப்பிரச்சனையில் நாம் இன்னும் தீவிரமாகவும் தீர்க்கமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜொகூர் சட்டமன்றத்திற்கு பி.எஸ்.எம். தேர்ந்தெடுக்கப்பட்டால், மாசுபடுத்தும் தொழில்துறைகளை ஆற்றோரங்களிலிருந்து விலக்கி வைப்பதற்கும் நதி இருப்புகளைப் பாதுகாக்கவும் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்துவோம்,” என அரா மேலும் சொன்னார்.