முடிவின்றி முடிவடைந்த இந்திய-இலங்கை மீனவர்களின் கச்சத்தீவு சந்திப்பு!

கச்சத்தீவில் புனித அந்தோனியார் பெருவிழாவின்போது வட இலங்கை மற்றும் தென்னிந்திய மீனவ சமூகங்களுக்கிடையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வமற்ற பேச்சுவார்த்தை தீர்மானம் இன்றி முடிவடைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த சந்திப்பு இடம்பெற்றது இதன்போது, இலங்கை கடற்பரப்பில் இந்திய இழுவை படகுகள் மீன்பிடியில் ஈடுபட மேலும் கால அவகாசம் வழங்கவேண்டும் என்ற தென்னிந்திய மீனவர்களின் கோரிக்கையை இலங்கை மீனவர்கள் ஏற்க மறுத்துள்ளனர்;

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், அண்மைக்காலமாக நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களின் மரணம், தாக்குதல் சம்பவங்கள், மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் குறித்து மீனவர் பிரதிநிதிகள் கவலை தெரிவித்தனர்.

ஆரம்பத்தில், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இலங்கை மீனவர்கள், இலங்கையின் கடற்பரப்பிற்குள் இந்திய படகுகள் அத்துமீறி நுழைவதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று குறிப்பிட்டனர்

இதேவேளை, வடக்கிற்கான பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை மீனவர்களுக்கு தலா 5,800 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்க உள்ளார். ஏற்கனவே வடக்குக்கு சென்றிருந்த சீனாவி;ன் தூதுவரும் மீனவர்களுக்கு நிவாரண மற்றும் மீன்பிடி உபகரணங்களை வழங்கியிருந்தார்.

 

 

Tamilwin