விழுந்து கிடக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தானும் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் காசிமும் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தது கருத்து வெளியிட்ட அவர்,
இந்த வார தொடக்கத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் பற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடு குறித்து அரசாங்கத்திற்கு விளக்கமளிக்க இலங்கைக்கு விஜயம் செய்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் சாங்யோங் ரீ(Changyong Rhee) நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.
எவ்வாறாயினும் சாங்யோங் ரீ மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலை சந்திக்கவில்லை. எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிக்கும் மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறாதது, சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்பில்லாத அவரது நிலைப்பாடு உறுதியில்லாது இருப்பதை குறிக்கிறது.
நாட்டின் பொருளாதாரத்திற்குப் பொறுப்பான முடிவெடுப்பவர்களிடம் கருத்தியல் வேறுபாடுகள் இருக்கும்போது எவ்வாறு இலகுவில் நெருக்கடிக்கான தீர்வை எதிர்பார்க்க முடியும்.
மத்திய வங்கியின் ஆளுநர் ஒருவர் நிதி அமைச்சரை வெளிப்படையாகக் குற்றம் சுமத்துவதை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு இணையாக வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படாததால் ரூபாவின் மதிப்பு குறைவது நிற்கவில்லை.
இதேவேளை, அனைத்து குடிமக்களும் தங்கள் அவலத்திற்கு முடிவு கட்டுவதில் எந்த உறுதியும் இல்லாமல் உள்ளனர். அமைச்சர் கபீர் மற்றும் நானும் தற்போது இலங்கையை இந்த நெருக்கடியில் இருந்து மீட்பதற்கான பொருளாதார கொள்கையை உருவாக்கி வருகிறோம். முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான சீர்திருத்தங்கள் சர்வதேச மற்றும் உள்ளூர் கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து வருகிறோம்.
மேலும், சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ள 20% மக்கள் தாங்க முடியாத கஷ்டங்களை அனுபவித்து வரும் சுமையை குறைக்கும் திட்டத்தை தொடங்க உள்ளோம். சந்தையில் போட்டியை அதிகரிக்கும் அதேவேளையில் சமூக நீதிக்கு உத்தரவாதம் அளிக்கும் சமூக சந்தைப் பொருளாதாரத்தை முன்வைப்போம் என்று நம்புகிறோம்.
எவ்வாறாயினும், எமது முற்போக்கு சிந்தனைக்கு இணங்க, எதிர்வரும் வாரங்களில் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான முக்கிய ஆலோசனைகளை நிபுணர்களுடன் நடாத்துவோம் என்றார்.
IBC Tamil