டொலர் நெருக்கடி காரணமாக இரண்டு தூதரகங்களையும் ஒரு துணை தூதரகத்தையும் மூட இலங்கை வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, ஈராக்கின் பக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம், நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள துணை தூதரகம் ஆகியவற்றை எதிர்வரும் 31ஆம் திகதி முதல் மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான டொலர் நெருக்கடியை கருத்திற் கொண்டு வெளிவிவகார அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதற்கமைய, டுபாயில் உள்ள துணை தூதரகத்தில் ஈராக் இராஜதந்திர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், நோர்வேயுடனான இராஜதந்திர விவகாரங்கள் சுவீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள துணைத் தூதரகத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் சிட்னியில் உள்ள துணைத் தூதரகம் அவுஸ்திரேலியாவின் கான்பராவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை 63 தூதரகங்களை பராமரித்து வருகிறது, இந்த மூன்று அலுவலகங்களும் மூடப்படுவதால் அவை 60 ஆக குறைவடைந்துள்ளன. டொலர் நெருக்கடி காரணமாக 60 இலங்கை தூதரகங்களின் செயற்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tamilwin