இலங்கை இதுவரை இல்லாத வகையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அத்யாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்திருப்பதால் சாமானியர்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின் உற்பத்திக்கு தேவையான எண்ணையை இறக்குமதி செய்ய முடியாததால், மின் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து விட்டது. எனவே, மின் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்கள் பல மணி நேரம் இருளில் மூழ்கியிருக்கின்றன. வரும் நாள்களில் மின்வெட்டு மேலும் அதிகமாகலாம். இலங்கை அரசாங்கம், இந்த நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா போன்ற நாடுகளில் கூடுதலாக கடன் வாங்குகிறது.
இந்நிலையில், இலங்கைக்கு 2.5 பில்லியன் டாலர் கடன் மற்றும் வர்த்தகக் கடன் வழங்குவது குறித்து, சீனா பரிசீலித்து வருவதாக கொழும்பில் உள்ள சீன தூதர் கி ஜென்ஹாங் கூறி உள்ளார்.
‘இறக்குமதியாளர்களுக்கான 1.5 பில்லியன் டாலர் கடன் உள்பட 2.5 பில்லியன் டாலர்களை இலங்கை கோரியுள்ளது. அந்த கோரிக்கை பலிசீலனையில் உள்ளது. கடன் மற்றும் இறக்குமதியாளரின் கடன் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதை இரு நாடுகளும் இப்போது விவாதித்து முடிவு செய்ய வேண்டும்’ என கி ஜென்ஹாங் தெரிவித்தார்.
எனினும், இலங்கையின் கடனை சீனா மறுசீரமைக்குமா என்ற கேள்விக்கு கி ஜென்ஹாங் நேரடியாக பதில் அளிக்கவில்லை.
கடந்த ஜனவரி மாதம் சீன வெளியுறவுத் துறை மந்திரி வாங் யீ, இலங்கைக்கு வந்த போது, தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறு அதிபர் கோத்தபய ராஜபக்சே கோரிக்கை விடுத்திருந்தார்.
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு வழங்கும் நிதியுதவியின் ஒரு பகுதியாக 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்குவதாக இந்தியா கடந்த வாரம் அறிவித்த நிலையில், சீன தூதரின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிப்ரவரி மாதம் பெட்ரோலிய பொருட்களை கொள்முதல் செய்ய இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை இந்தியா வழங்கியிருந்தது.
இலங்கை வெளிநாடுகளில் வாங்கியுள்ள கடனில் சுமார் 10 சதவீதம் சீனாவில் இருந்து வாங்கப்பட்ட கடன் என்பது குறிப்பிடத்தக்து.
Malaimalar