நீண்ட நேர மின்தடையால் நாடு இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தாலும் பற்றாக்குறையாலும் மக்கள் வீதிகளில் அலைய வேண்டிய நிலை உருவாகியுள்ளது இந்நிலையில், இந்த அரசு இனியும் தாமதிக்காமல் கூண்டோடு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
நாடு தழுவிய ரீதியில் நாளை சுழற்சி முறையில் 13 மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடை நடைமுறைப்பத்தப்படவுள்ளது.
அதேவேளை, நாளை மறுதினம் முதல் 15 மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடையை நடைமுறைப்படுத்தும் சாத்தியம் அதிகம் காணப்படுகின்றது. இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாடு வரலாறு காணாத நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இதற்கு இந்த அரசே முழுப்பொறுப்பு.
தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் சார்ந்த தீர்வுகள் குறித்து நாம் பல தரப்புடனும் கலந்தாலோசித்து வருகின்றோம்.
இந்த அரசின் ஆட்சி தொடர்ந்தால் இலங்கை மீண்டெழ முடியாது. எனவே, இந்த அரசு கூண்டோடு பதவி விலகவேண்டும். அப்போதுதான் ஆட்சியை நாம் பொறுப்பேற்க முடியும்.
எங்கள் கைகளில் ஆட்சி அதிகாரம் கிடைத்தால் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வோம்” எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
Tamilwin