எதிர்க்கட்சியின் சிறந்த ஆலோசனைகளைப் பெற்று பிரச்சினைகளுக்கு தீர்வுகாணத் தயார் – மஹிந்த ராஜபக்ச!

எதிர்க்கட்சியினரது சிறந்த ஆலோசனைகளைப் பெற்று பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தயாராகவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அனைத்து தரப்பினரது ஆலோசனைகளையும் ஒருமுகப்படுத்தும் வகையில் கூட்டப்பட்ட சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணித்த அரசியல் கட்சிகள் மீண்டும் சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று (30) இடம்பெற்ற ‘நீர்பாசன சுபீட்சம்’ செயற்திட்டத்தின் கீழ் ஐயாயிரம் குளங்கள் மற்றும் கால்வாய்களை மறுசீரமைக்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை மெய்நிகர் முறைமை ஊடாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அரசாங்கம் மறுக்கவில்லை. அரசியல் செய்யும் தருணம் இதுவல்ல அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

கொரோனா பெருந்தொற்று மற்றும் அதன் பின்னரான காலப்பகுதியில் தோற்றம் பெற்றுள்ள பொருளாதார சவால்களுக்கு முகம் கொடுத்து நெருக்கடியானதொரு சூழ்நிலையினை எதிர்கொண்டுள்ளோம்.

தேசிய உற்பத்திகளை முன்னிலைப்படுத்திய பொருளாதாரம் அரசாங்கத்தின் பிரதான கொள்கையாக காணப்படுகிறது. தற்போதைய நிலைமையில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம். சவால்களை சிறந்த முறையில் வெற்றிக்கொண்டால் சிறந்த எதிர்காலத்தை எம்மால் உருவாக்க முடியும்.

நீர்பாசனத்துறை முன்னேற்றமடைந்தால் விவசாயத்துறையும், நன்னீர் மீன்பிடி கைத்தொழில் உட்பட விவசாயத்துறையுடன் ஒன்றினைந்த ஏனைய கைத்தொழில் துறைகளும் முன்னேற்றமடையும். கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும்.

மக்களின் துயரத்தை நாங்கள் அறியவில்லையா என ஒருசிலர் கேட்கிறார்கள்.

நாடும், நாட்டு மக்களும் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே சர்வகட்சி மாநாட்டை நடத்தி அனைத்து தரப்பினரது ஆலோசனைகளையும் ஒன்றினைத்து ஒரு தீர்மானத்தை செயற்படுத்தவுள்ளோம்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை அரசாங்கம் உருவாக்கவில்லை. அரசாங்கம் தான் பரவலை தீவிரப்படுத்தியுள்ளது என ஒருசிலர் குறிப்பிடுவதை அவதானித்துள்ளேன்.

சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்த அரசியல் கட்சிகள் மாநாட்டில் இரண்டாவது முறையாக கலந்துக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளேன்.

புத்தாண்டு காலம் நெருங்கியுள்ளது ஒரு சிலர் நடப்பு உண்மை நிலவரத்தை அறிந்துக்கொண்டு இன்று அல்லது நாளை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும், உணவு தட்டுப்பாடு ஏற்படும் என மக்களை தவறான முறையில் வழிநடத்தும் வகையில் போலியான கருத்துக்களை குறிப்பிடுகிறார்கள்.

தவறான பிரசாரங்கள் சமூக கட்டமைப்பில் தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு மூல காரணியாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

IBC Tamil