இலங்கையில் அனைத்து கட்சி அரசாங்கம் அமைக்க வேண்டும்- ஆளும் கூட்டணி கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் வரலாறு காணாத அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்பட எரிப்பொருட்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தினமும் 13 மணி நேரம் வரையில் மின்வெட்டு அமலில் உள்ளதால் பொதுமக்களின் மக்களின் இயல்பு  வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிகளுக்கு அதிபர் அதிபர் கோத்தபய ராஜபக்சே எடுத்த முடிவுகளே காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கோத்தபய பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

போராட்டங்கள்  தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார் அதிபர் கோத்பய ராஜபக்சே.

இந்நிலையில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, அனைத்துக் கட்சிகளையும் கொண்ட அரசாங்கத்தை அமைக்குமாறு அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம் ஆளும் கூட்டணிக் கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்த கோரிக்கையை அரசாங்கம் புறக்கணித்தால் சுதந்திரக் கட்சி, அரசாங்கத்தை விட்டு வெளியேறுமா? என்பது குறித்து தீர்மானம் எடுக்குமாறு கட்சித் தலைவர்களிடம் தெரிவிக்க உள்ளதாக சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும், இணை மந்திரியுமான தயாசிறி ஜெயசேகரா கூறினார்.

முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான சுதந்திரக் கட்சிக்கு பாராளுமன்றத்தில் 14 உறுப்பினர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Malaimalar