நாட்டில் ஏற்பட்டுள்ள மக்களின் போராட்டத்திற்கு ஜனாதிபதியும் அரசாங்கமுமே காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பேரையும் மக்கள் விமர்சிக்கின்றனர் என்பது குறித்து நாடாளுமன்றத்தில் பேசுகிறோம். இந்த பிரச்சினை எங்கு ஆரம்பித்தது என்பதை கண்டறிய வேண்டும்.
2019 ஆம் ஆண்டு நாட்டில் இனவாதத்தை தூண்டி, அடிப்படைவாதத்தை தூண்டி, மத வாதத்தை தூண்டி,ஈஸ்டர் தாக்குதலை விற்றே தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தது. அங்கிருந்தே ஏமாற்றுதல் ஆரம்பமாகியது.
ஏமாற்றி 69 லட்சம் வாக்குகளையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தையும் பெற்றுக்கொண்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாட்டின் ஜனாதிபதியும் அரசாங்கம் மக்கள் ஏமாற்றியது.
கோவிட் தொற்று ஆரம்பமானது போது நாங்களும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒவ்வொரு பாணி மருந்துகளை நம்பாதீர்கள், தடுப்பூசியை கொண்டு வருங்கள் என்று கூறினோம்.
அப்போது எங்களை தேசத்துரோகிகள், தேசியத்தை அங்கீகரிக்காதவர்கள் என்று கூறினர். இதன் பின்னர் முகக்கவசங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்கிறீர்களா என்று கேட்டோம், அப்போதும் எங்களை விமர்சித்தனர்.
இறுதியில் தடுப்பூசியை இறக்குமதி செய்தனர். பின்னர் எங்களை திட்ட ஆரம்பித்தனர். தற்போது நாங்கள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பாதொனி எங்கே என்று கேட்க நேரிடும்.
அவரே சேதனப் பசளையை இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கினார். உலகில் எங்காவது உடனடியாக சேதனப் பசளை பயிர் செய்கைக்கு மாறிய நாடுகள் உள்ளனவா?.
ஜனாதிபதியின் ஆவணம் காரணமாக, பாதெனிய என்று ஒற்றை நபர் கூறியதை கேட்டு நாட்டின் கமத்தொழிலாளர்கள் மற்றும் விவசாயத்தை படுகுழியில் தள்ளினார். விவசாய ஏற்றுமதி மூலம் நாட்டுக்கு வருடாந்தம் கிடைக்கும் 2 ஆயிரத்து 400 மில்லியன் டொலர்களை இல்லாமல் செய்தார்.
அதேபோலவே கோவிட் மரணங்கள் சம்பந்தமான பிரச்சினையில் முஸ்லிம்கள் உடல்களை பலவந்தமாக தகனம் செய்து, நாட்டில் இரண்டு சட்டங்களை நடைமுறைப்படுத்தினார்கள்.
ஆளும் கட்சியில் இருக்கும் அலி சப்றியையும் அசௌகரியத்திற்கு உள்ளாகினர். கோவிட் தொற்றால் மரணித்தவர்களை பலவந்தமாக தகனம் செய்ததன் சாபமே தற்போது ஏற்பட்டுள்ளது.
அஜித் நிவாட் கப்ரால் நாட்டின் பொருளாதார கொலையாளி என நாங்கள் கூறினோம். அவர் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்கான ரூபாயின் பெறுமதியை பலவந்தமாக கட்டுப்படுத்தி வைத்திருந்தார். எதிர்க்கட்சியினராகிய நாங்கள் அதனை கைவிடுமாறு கோரினோம்.
அப்படி செய்திருந்தால், நாட்டுக்கு அந்நிய செலாவணி வந்திருக்கும், மாதம் 450 மில்லியன் டொலர்கள் கிடைத்திருக்கும். அப்படி டொலர்கள் கிடைத்திருந்தால், பொருட்களின் விலைகள் அதிகரித்திருக்காது.
பொருட்களின் விலைகள் அதிகரிக்காதிருந்திருந்தால்,பொருட்களை கொள்வனவு செய்ய வரிசைகளும் ஏற்பட்டிருக்காது, இந்த நிலைமையும் ஏற்பட்டிருக்காது, மக்கள் வீதியில் இறங்கி இருக்கவும் மாட்டார்கள்.
வீதியில் இறங்கி இருப்பது எமது கட்சியினர் அல்ல என்பதை தெளிவாக கூறுகின்றோம். அவர்கள் எங்களுக்கு வாக்காளித்தவர்களும் இல்லை. 69 லட்சம் வாக்குகளை வழங்கி, பாற்சோறு சாப்பிட்ட மக்களே, கோட்டா வீட்டுக்கு போ, ராஜபக்ச வீட்டுக்கு போ என்று கூறுகின்றனர்.
மக்களின் இந்த போராட்டம் தொடர்பாக நாம் கவனம் செலுத்த வேண்டும், எந்த வகையிலும் இதனை வன்முறையை நோக்கி கொண்டு செல்ல இடமளிக்க முடியாது. நாட்டின் சட்டம், அரசியலமைப்புக்கு அமைய மக்களின் போராட்டங்களுக்கு இடமளிக்க வேண்டும்.
74 வருடங்கள் என்ன செய்தார்கள், 225 பேரும் என்ன செய்தார்கள் என கேட்கின்றனர். 225 பேரில் இல்லாத வெளியில் இருந்து ஒருவரை ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டு வந்து இரண்டு வருடங்களில் வெளியேறுமாறு கோருகின்றனர்.
225 பேருக்கு வெளியில் வியத் கம ஊடாக சிலரை நாடாளுமன்றத்திற்கும் கொண்டு வந்தனர். எங்கே சீதா அம்மையார், அவர் தற்போது நாடாளுமன்றத்திற்கும் வருவதில்லை.
காலத்திற்கு காலம் ஒவ்வொரு கோஷங்கள் வரும் 2010 ஆம் ஆண்டு படையினர் என்ற கோஷத்தை கொண்டு வந்தனர். 2019 ஆம் ஆண்டு வியத் கம என்ற கோஷத்தை கொண்டு வந்தனர். என்ன நடந்தது எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இதனால், ஜனாதிபதியையும் ராஜபக்சவினரையும் வீட்டுக்கு செல்லுமாறும் கொள்ளையிட்ட பணத்தை திரும்ப வழங்குமாறுமே மக்கள் கோருகின்றனர் எனவும் எஸ்.எம்.மரிக்கார் கூறியுள்ளார்.
Tamilwin