இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஆகியவற்றால் அவதி அடைந்துள்ளனர்.
பல மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி துயரத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவியில் இருந்து விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
சமீபத்தில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஆனால் அதிபர் பதவியில் இருந்து விலக மாட்டோம் என்று கோத்தபய ராஜபக்சே அறிவித்தார். இதனால் மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து இருக்கிறது.தினமும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள்.
மார்ச் மாத இறுதியில் வெறும் 1.9 பில்லியன் டாலர் கையிருப்பில் இருந்த நிலையில், இந்த ஆண்டு கடனைச் செலுத்த இலங்கைக்கு 7 பில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாக மதிப்பீடுகள் காட்டுகின்றன.
இந்நிலையில், இலங்கை அரசு பெற்ற வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்துவது தற்போதைய சூழலில் மிகவும் சவாலானது என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீர சிங்கே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
இலங்கை அரசு பெற்ற வெளிநாட்டு கடன்கறை திருப்பி செலுத்துவது தற்போதைய சூழலில் மிகவும் சவாலானது. சாத்தியமற்றது.
வெளிநாடுகளிலிருந்து பெற்ற கடன்களை திருப்பி செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அரசாங்கங்களின் கடன்கள் உள்பட அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நாடு செலுத்தத் தவறி வருகிறது. குடியரசின் நிதி நிலையை மேலும் மோசமடைவதை தடுக்கும் வகையில், அரசாங்கம் அவசரகால நடவடிக்கையை கடைசி முயற்சியாக மட்டுமே எடுத்து வருகிறது.
நிலைமை சீரானபின் கடனை திருப்பி செலுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Malaimalar