இலங்கை அதிபர் மாளிகை அருகே 4-வது நாளாக மக்கள் முற்றுகை- கூடாரம் அமைத்து சமைத்து சாப்பிட்டு போராட்டம்


இலங்கை
யில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஆகியவற்றால் அவதி அடைந்துள்ளனர்.

பல மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி துயரத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவியில் இருந்து விலக கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

சமீபத்தில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஆனால் அதிபர் பதவியில் இருந்து விலக மாட்டோம் என்று கோத்தபய ராஜபக்சே அறிவித்தார். இதனால் மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து இருக்கிறது. தினமும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள்.

இதற்கிடையே இலங்கை அதிபர் மாளிகை அருகே உள்ள காலி திடலில் மக்கள் திரண்டனர் அங்கு போராட்டத்தை தொடங்கிய அவர்கள் ராஜபக்சேக்களை வீட்டுக்கு அனுப்பும் வரை திடலை விட்டு வெளியேற மாட்டோம் என்று தெரிவித்தனர்.

அந்த திடலில் கூடாரங்களை அமைத்து அதில் போராட்டக்காரர்கள் தங்கி இருக்கிறார்கள். சமையல் கூடாரங்கள் அமைத்து சமைத்து வருகிறார்கள்.

‘கோ ஹோம்சோட்டா கிராமம்‘ என்று பெயரிட்டுள்ள இப்போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கூடி இருக்கிறார்கள். சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு உள்ளனர். மேலும் இளைஞர்கள் போராட்டத்தில் பங்கேற்க வந்த வண்ணம் உள்ளனர். இன, மத, மொழி பேதமின்றி திடலில் குவிந்துள்ள மக்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

அதிபர் மாளிகை அருகே காலி திடலில் மக்களின் போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது. அவர்கள் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக கோரி கோ‌ஷம் எழுப்பினார்கள். போராட்ட களத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு உள்ள நிலையில் தொடர்ந்து இளைஞர்கள் வருவதால் அங்குள்ள சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திடலில் உள்ள மக்கள் தங்களது போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். திடலை நோக்கி வரும் அனைத்து சாலைகளிலும் இளைஞர்கள் அதிகளவில் குவிந்து இருக்கிறார்கள். இதனால் வரும் நாட்களில் இளைஞர்களின் போராட்டம் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் ராணுவத்தினரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் நாடு முழுவதும் மக்களின் ஆர்ப்பாட்டம் நீடித்தபடி இருக்கிறது. இப்போராட்டங்களால் இலங்கையில் மக்கள் புரட்சி ஏற்பட்டு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் அதிபர் மாளிகை அருகே நடந்து வரும் போராட்டத்தில் மக்களோடு மக்களாக புலனாய்வு பிரிவினர் உள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, அதிபர் மாளிகை அருகே போராட்டத்தில் தினமும் அதிகளவில் அதிகாரிகளை பணியில் அமர்த்துமாறு உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. அரசு புலனாய்வு பிரிவினர் போலீஸ் சிறப்புப் படை, மேல் மாகான நுகேகொட புலனாய்வு கண்காணிப்பு அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிபர் பாதுகாப்பு தொடர்பாக தகவல்களை திரட்ட நுகேகொட புலனாய்வு பிரிவின் 150-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பல்வேறு பிரிவுகளில் இருந்தும் போலீஸ் படைகளும் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றனர்.

மேலும் சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டு அனைத்து முக்கிய நகரங்களிலும் விசே‌ஷ பாதுகாப்பு ஏற்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே போலீஸ் அதிகாரிகள். எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து போலீஸ் அதிகாரிகளும் தங்களது செல்போன்களை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளும் வகையில் செயலில் வைத்திருக்க வேண்டும் என்று போலீஸ் துறை தலைவர் சந்தன விக்ரமரட்ன உத்தரவிட்டு உள்ளார்.

 

போராட்டத்தை மக்கள் கைவிடவேண்டும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்சே வேண்டுகோள் விடுத்தார். நாட்டு மக்களுக்கு உரையாற்றி மகிந்த ராஜபக்சே பேசியதாவது:-

இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தை மக்கள் கைவிடவேண்டும். மக்கள் வீதிகளில் போராடும் ஒவ்வொரு நிமிடமும் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு 24 மணி நேரமும் உழைத்து வருகிறது.

நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்பட வேண்டும். அதற்கு இலங்கை அரசு பொறுப்பேற்று கொள்ளும்.

போராடுபவர்கள், ஒட்டுமொத்தமாக 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். அவ்வாறு பாராளுமன்றத்தை முழுமையாக ரத்து செய்வது ஆபத்தானது என்றார்.

 

 

Malaimalar