இலங்கையில் அதிபர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் தொடர் போராட்டம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் மக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அலுவலகத்திற்கு முன்பு காலியாக உள்ள திடலில் ஒன்று கூடி உள்ள போராட்டக்காரர்கள் கைகளில் கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு கோ கோத்தபய கோ என்று கோஷங்களை எழுப்பினர்.

மக்கள் நிறைய துன்பத்தில் உள்ளதால் நியாயம் கேட்கிறார்கள் என்றும், சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என அனைவரும் அரசாங்கத்திற்கு எதிராக ஒரே உணர்வுடன் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவதாக போராட்டக்காரர் ஒருவர் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய மற்றொரு போராட்டக்காரர்,  இலங்கையின் புத்தாண்டை நாங்கள் போராட்டங்களுடன் கொண்டாடினோம் என்று தெரிவித்தார்.

100 ரூபாய்க்கு விற்கப்படும் பொருட்கள் இப்போது 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. யாரிடமும் பணம் இல்லை. பணத்தை அரசு என்ன செய்தது? நாடு ஏன் திவாலானது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஊழல் மற்றும் தவறான ஆட்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி போராட்டக்காரர்கள், ராஜபக்சே சகோதரர்கள் ஆட்சியை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தினர்

 

 

Malaimalar