காலி முகத்திடலில்தான் இலங்கை அரசியலமைப்பின் சிற்பியான ஜே.ஆர் ஜெயவர்த்தன முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்தநிலையில் தற்போது காலிமுகத்திடலில் இடம்பெறும் போராட்டம் வெற்றி பெற்று, கோட்டா மாமா வீட்டிற்குச் சென்றால், காலிமுகத்திடல், கடைசி நிறைவேற்று ஜனாதிபதியை வீழ்த்திய தளமாக அமையும்.
எனவே ஒரு சிலரைத் தவிர, காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு தேசத்தின் ஆசீர்வாதம் உள்ளது என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் பத்திப்பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடலில் என்ன நடக்கிறது என்பதை ஒட்டுமொத்த தேசமும் பார்த்துக் கொண்டிருக்கிறது.
திரும்பிப் பார்க்கும்போது கோட்டா மாமா மிரிஹானவில் ஒரு தந்திரத்தைத் தவறவிட்டார்.
மிரிஹானவில் போராட்டக்காரர்களை அடக்க காவல்துறையினரை கட்டவிழ்த்து விடாமல் இருந்திருந்தால், கோட்டா மாமாவின் அலுவலகத்திற்கு வெளியே ‘தொலைபேசி’ காரர்களாலும், சிவப்பு சகோதரர்களாலும் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தைப் போன்று அதுவும் இன்னொரு போராட்டமாக முடிந்திருக்கும்.
எனினும் கோட்டா அந்த சந்தர்ப்பத்தை தவறிவிட்டுவிட்டார்.
இன்று இடம்பெற்ற சம்பவங்களே, போராட்டத்தை இன்னும் ஒரு படி மேலே கொண்டு செல்வதற்கான உத்வேகத்தை கொடுத்துள்ளது.
ஒன்பதாம் திகதி காலி முகத்திடலுக்கு ஒரு மில்லியன் மக்களை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அந்த எண்ணிக்கை வரவில்லை
எனினும் அதற்கு பின்னர் தற்போது ஆயிரக்கணக்கானோர் நாளாந்தம் இந்த போராட்டத்தில் இணைகின்றனர்
எந்தவொரு பெரிய அரசியல் கட்சி அல்லது எந்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் உதவியும் இல்லாமல் மக்களை இந்த போராட்டத்துக்கு பக்கம் கொண்டு வர முடிந்தமையே இந்த போராட்டம் வெற்றி பெற்றதற்கு ஒரு காரணம்,
எதிர்கட்சியினர் மிகவும் புத்திசாலித்தனமாக, காலி முகத்திடலில் இருந்து விலகி இருப்பதுவும் இந்த போராட்டத்தின் வலுவுக்கு ஒரு காரணம் என்று கூறலாம்.
ஒன்பதாம் திகதிக்கு பின்னர்; தொலைக்காட்சித் திரைகளில் அரசாங்க அரசியல்வாதிகளின்; முகங்களைப் பார்ப்பதற்கு ஆசைப்பட்டபோதும் அவர்களில் பெரும்பாலோர் இப்போது தலைமறைவாக இருப்பதாகத் தெரிகிறது.
இனம் மற்றும் மதத்தின் தடைகளை உடைத்ததில் காலிமுகத்திடம் போராட்டம் சாதனை படைத்துள்ளது.
இனவாதம் என்பது வாக்குகளைப் பெற அரசியல்வாதிகள் பயன்படுத்தும் தந்திரம் என்பதை எமது பெரும்பான்மையான மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.
இந்த போராட்டத்தை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தொடரத் தயார் என்;று போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.
அது போற்றத்தக்கது.
இதற்கிடையில், சக்திகள் சர்வதேச நாணய நிதியம், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து கடன்களை ஒன்றிணைத்து எரிவாயு, எரிபொருள் மற்றும் மின்சாரம் வழங்க முடியும் என்று நம்புகின்றன.
இதன் மூலம் இந்த போராட்டம் இயற்கை மரணமாகிவிடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்
ராஜபக்ச குலத்தினர் தாங்கள் அனுபவிக்கும் அனைத்தையும் துறந்து சத்தமில்லாமல் வெளியேற வாய்ப்பில்லை.
அவர்கள், தங்கள் பாதுகாப்பு குறித்து அஞ்சுகிறார்கள். எனவே, 225 பேரையும் விரும்பாவிட்டாலும் இந்த போராட்டத்தின் மூலம் சாதிக்க நினைக்கும் எந்த மாற்றமும் நாடாளுமன்றத்தின் மூலமே செயல்படுத்தப்பட வேண்டும் என்று பத்திப்பகுதியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே அரசியல் அமைப்புக்கு உட்பட்ட வகையில், செயற்பட்டு, கோட்டா மாமா வீட்டிற்குச் சென்றால், காலிமுகத்திடல், கடைசி நிறைவேற்று ஜனாதிபதியை வீழ்த்திய தளமாக அமையும் என்று ஆங்கில செய்தித்தாளின் பத்தி பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tamilwin