கடந்த மூன்று வருடத்தில் சவாலுக்கு உள்ளானது தொழிலாளரே! – மே தின வாழ்த்துச் செய்தியில் அரச தலைவர்

நாட்டில் கடந்த மூன்று வருடங்கள் பாரிய சவாலுக்கு உள்ளாகியது தொழிலாளர் வர்க்கமே என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்றைய மே தினத்தை முன்னிட்டு அரச தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் குறிப்பிட்டதாவது,

சகல சவால்களையும் எதிர்கொண்டு விடாமுயற்சியுடன் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த தொழிலாளர் வர்த்தகத்தினர் உறுதிப்பூண்டுள்ளனர்.

உலகவாழ் உழைக்கும் சமூகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில், இந்த வருட சர்வதேச தொழிலாளர் தினம் நினைவுகூறப்படுகின்றது.

நாட்டில் கடந்த மூன்று வருடங்கள் பாரிய சவாலுக்கு உள்ளாகியது தொழிலாளர் வர்க்கமே ஆகும். நாளுக்கு நாள் தொழிலாளர்கள் மீதான அழுத்தங்கள் அதிகமாக உள்ளன. அதிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கும், நிலவுகின்ற சிக்கலான நிலைமையினைக் கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கம் என்ற வகையில் பல்வேறு அணுகுமுறைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அந்நியச் செலாவணி இழப்பானது பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. அவை அனைத்தையும் முகாமைத்துவம் செய்வதுதான் தற்போதைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழியாகும். ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமை யாரால் ஏற்படுத்தப்பட்டது என்பதைப் பின்தொடர்வதற்குப் பதிலாக, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதில் கவனம் செலுத்துவதே தற்போது மேற்கொள்ள வேண்டிய விடயமாகும்.

அதற்காக மிகவும் பொருத்தமான மற்றும் செயற் திறன்மிக்க வேலைத்திட்டத்திற்குச் சென்று மக்களின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும்.

இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக பொறுப்புடன் ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அரச தலைவர் என்ற வகையில் மக்கள் சார்பாக அழைப்பு விடுக்கிறேன்.

 

 

IBC Tamil