குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவித்தொகை: இலங்கை அரசு அறிவிப்பு

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கூட திண்டாட்டமாகி விட்டது. இந்நிலையில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பணம் வழங்கி உதவ இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ரூபாய் 3,000 முதல் 7,500 வரை பண உதவி வழங்குவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த முடிவு குறித்து இலங்கையின் வர்த்தகத்துறை மந்திரி ஷெஹான் சேமசிங்க கூறியிருப்பதாவது:-

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உலக வங்கி இலங்கைக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குகிறது. அத்தியாவசிய இறக்குமதிகளுக்கான கட்டணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் வகையில் இலங்கைக்கு 600 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவியை வழங்க உலக வங்கி ஒப்புக் கொண்டுள்ளது. அதில் 300 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி இதற்காக பயன்படுத்தப்படும்.

சுமார் 33 லட்சம் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு மே மாதம் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் பணம் வழங்கப்படும்.

முதியோர் உதவித்தொகை, சிறுநீரக நோயாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகை போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் ரூ.3,000 முதல் ரூ.7,500 வரையிலான தொகைகள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும்.

வங்கிக் கணக்குகள் மூலம் மட்டுமே பணப் பரிமாற்றம் செய்யப்படும். வங்கிக் கணக்கு இல்லாதோர் உடனடியாக வங்கிக் கணக்கை தொடங்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடான இலங்கைக்கு, பல்வேறு உதவிகளை செய்துவரும் இந்தியா,  எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு உதவியாக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கூடுதலாக கடன் வழங்குவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல, இலங்கையின் கோரிக்கையை ஏற்று, மருந்து, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு சீனா 300 மில்லியன் யுவான்களை இலங்கைக்கு வழங்க உள்ளது.

 

Malaimalar