இலங்கை பாராளுமன்றம் கூடியது: பதவி விலக ராஜபக்சே மறுப்பு- நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தகர்க்க தீவிரம்

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு ஏற்று அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜ பக்சே பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பதவி விலக மறுக்கும் கோத்தபய ராஜபக்சே மற்றும் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் 2 நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் கொண்டு வந்துள்ளன. ராஜபக்சே சகோதரர்கள் அமைத்த கேபினட் துணைக்குழுவை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டி வருகின்றன.

முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தீர்மானத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக களம் இறங்கி உள்ளது. அந்த கட்சி சார்பில் 2 நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

முதலாவது தீர்மானம் அரசியல் சாசன பிரிவு 42ன் கீழ் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரானதாகும். 2வது தீர்மானம் பிரதமர் மகிந்த ராஜபக்சே அரசுக்கு எதிரானதாகும்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இலங்கை பாராளுமன்றம் இன்று கூடியது. இதில் எதிர்க்கட்சி கள் கொடுத்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. தீர்மானத்தின் மீது எப்போது விவாதம் நடத்துவது என்பது பற்றி இன்று கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. அவை தலைவரிடம் நோட்டீஸ் கொடுத்த பிறகு அதன் மீது ஓட்டெடுப்பு நடத்த இலங்கை அரசியல் சாசன சட்டத்தின்படி ஒரு வார காலம் அவகாசம் உள்ளது. எனவே ஓட்டெடுப்பு எப்போது நடைபெறும் என்பது இன்றைய கூட்டத்தில் தெரியும்.

2 நம்பிக்கை இல்லா தீர்மானங்களில் ஒன்றை மட்டும் அரசு தரப்பில் ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது. கோத்தபய ராஜபக்சேக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தள்ளுபடி செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம் நடந்த பிறகு ஒட்டெடுப்பு நடத்த வாய்ப்பு உள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் உள்ள 225 எம்.பி.க்களில் 113 எம்.பி.க்கள் ஆதரவு இருந்தால்தான் நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறும். ஆனால் எதிர்க்கட்சிகளிடம் அந்த அளவுக்கு பலம் இல்லை.

இதற்கிடையே தமிழர் தேசிய கூட்டணி மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிகளும் நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் கொண்டு வர உள்ளன. எனவே மகிந்த ராஜபக்சேவை பதவியில் இருந்து விரட்ட முடியும் என்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கையுடன் உள்ளன.

நம்பிக்கையில்லா தீர்மானங்கள் வெற்றி பெற்றாலும் அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சேவை விலக்க முடியாது. அவர் பதவியில் விலக வேண்டியது கட்டாயம் இல்லை. அவரே தாமாகவே முன் வந்து விலகினால்தான் உண்டு. இல்லையெனில் சட்டத்திருத்தம் செய்து பதவி நீக்கம் செய்ய முடியும்.

அதே சமயத்தில் மகிந்த ராஜபக்சேவை தீர்மானம் மூலம் பதவி விலக செய்ய முடியும். ஆளுங்கட்சி எம்.பி.க்களில் சிலர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக உள்ளனர். எனவே நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மகிந்த ராஜபக்சே பதவி விலக மாட்டார் என்று பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த மகிந்த ராஜபக்சே பதவி விலக மாட்டேன் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டாலும் ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும், புதிய அரசாங்கம் மற்றும் புதிய அமைச்சரவை பற்றி இன்று பல்வேறு வதந்திகள் உலவுகின்றன. எவ்வாறாயினும் இது தொடர்பாக இதுவரை ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையே இலங்கையில் இன்று முதல் அரசியல்வாதிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி மற்றும் வானொலி விவாதங்களில் கலந்து கொள்ளகூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Malaimalar