எதிர்வரும் வாரம் அரசியலில் அதிரடி மாற்றங்கள்! பிரதமர் பதவி விலக்கப்படலாம் – 39 சுயாதீன எம்.பிக்களுடன் இடைக்கால அரசாங்கம்

ஜனாதிபதி, பிரதமர் பாதுகாப்பாகவே உள்ளார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீதிக்கிறங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்,

இடைக்கால அரசாங்கத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொள்கை ரீதியில் இணக்கம் தெரிவித்துள்ளது. பொதுஜன பெரமுனவுடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ளது.

சர்வ கட்சிகளையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் நாளை அல்லது நாளை மறுதினம் பிரதான எதிர்க்கட்சிகளுடன் விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

சாதகமான பதில் கிடைக்காவிடின் அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 39 பேரையும் ஒன்றிணைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க அவதானம் செலுத்தப்படும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது பிரதமரின் பதவி விலகல், இடைக்கால அரசாங்கம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரம் பிரதமர் பதவி விலக்கப்படலாம் அல்லது அவர் பதவி விலக நேரிடலாம்.

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைகிறது. ஜனாதிபதி, பிரதமர் பாதுகாப்பாகவே உள்ளார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீதிக்கிறங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து விரைவாக பொதுத்தேர்தலை நடத்துவது அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

தான் பதவி விலகப் போவதில்லை என தொடர்ந்தும் கூறி வந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச திடீரென பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தான் இணங்க தயார் என அறிவித்திருந்தார்.

அதன்படி, ஜனாதிபதி எடுக்கும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்திருந்தார்.

20வது திருத்தச் சட்டத்தின் கீழ் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாக மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும் தற்போது தன்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி கூறவில்லை எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவி தனக்கு வழங்கப்படுமாயின் நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மை பலத்தை தன்னால் நிரூபிக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதற்கிடையில் பிரதமர் பதவியை தனக்கு தருமாறும் தன்னால் சிறப்பாக செயற்பட முடியுமென சில அரசியல்வாதிகள் கேட்டு வருவதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை, பல அரசியல்வாதிகள் பகிரங்கமாக மேடைகளில் பிரதமர் பதவிக்கு அரசியல் முக்கியஸ்தர்களை பரிந்துரைக்கவும் செய்கின்றனர்.

இதேநேரம் அரசாங்கத்தின் உயர்மட்டத்திலிருந்து பலருக்கு பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பும் செல்வதாக தெரியவருகிறது.

இலங்கையின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பதவியேற்க வாய்ப்புள்ளதாக அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் பதவியை ஏற்குமாறு சஜித் பிரேமதாஸவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ள நிலையில், இது தொடர்பான எதிர்பார்ப்பு அதிகாரித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் மீண்டும் இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வலியுறுத்தியுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

Tamilwin