இந்தியாவின் அழைப்பை ஏற்று பிளாஸ்டிக் மாசுபாட்டை பல்வேறு நாடுகள் குறைத்துள்ளன- மத்திய மந்திரி தகவல்

மொஹாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பன்முகத்தன்மை குறித்த மாநாட்டில் பங்கேற்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி  பூபேந்தர் யாதவ், உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

இந்தியாவின் சுற்றுச்சூழல் சட்டமும் கொள்கையும்,  பாதுகாப்பு மற்றும் ஆற்றல் சேமிப்பு பற்றியது மட்டுமல்ல – அது சமத்துவமும் நீதியும் கொண்டதாகும்.

1992 ரியோ பிரகடனத்தின் கீழ் நமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, இந்தியா ஒரு வலுவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு செயல்முறையைக் கொண்டுள்ளது.

உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான மாநாட்டை எழுத்திலும் உணர்விலும் செயல்படுத்தும் உலகின் சில நாடுகளில் இந்தியாவும் இருக்கிறது.

இந்தியாவின் தனிநபர் கார்பன் வெளியேற்றம் உலகிலேயே மிகக் குறைவாக உள்ளது. மேற்கத்திய தொழில்மயமான நாடுகள் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நிதிச் சுமையின் பெரும்பகுதியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடித் தலைமையின் கீழ் பாரிஸில், இந்தியா நிலையான வாழ்க்கை முறைகள் மற்றும் காலநிலை நீதிக்கான கருத்தை வழங்கியது, இவை இரண்டும் பாரிஸ் ஒப்பந்தத்தின் முன்னுரையில் இடம் பெற்றுள்ளன. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான காடுகளை சார்ந்து வாழும் சமூகங்களை இந்தியா கொண்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில், பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடித்தல் என்ற கருப்பொருளில் உலக சுற்றுச்சூழல் தினத்தை இந்தியா நடத்தியது.  ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான உலகளாவிய அழைப்பை பிரதமர் மோடி ,விடுத்தார். இந்தியாவின் இந்த அழைப்பு ஏற்று உலகெங்கிலும் பிளாஸ்டிக் மாசுபாட்டின் மீது குறிப்பிடத்தக்க நடவடிக்கையை பல்வேறு நாடுகள் எடுத்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

Malaimalar