அரசாங்கத்திற்கு சார்பாக மாறும் போராட்டக்களம் – நேற்றிரவு பல இடங்களில் வன்முறை

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் இன்றுடன் ஒரு மாதத்தை பூர்த்தி செய்துள்ளது. இதுவரை அமைதி வழியில் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் தற்போது வன்முறையாக மாறி வருகின்றது.

நேற்றையதினம் கொழும்பின் பல பகுதிகளில் பொது மக்கள் குழுக்களாக பிரிந்து தாக்கிக் கொண்ட சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக மேற்கொண்ட போராட்டங்களின் போது இந்த மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு எரிவாயுவை பெற காத்திருந்த குழுவினர் மோதலில் ஈடுபட்டமையினால் பதற்ற நிலை ஏற்பட்டது.

கொம்பனித்தெரு பகுதியில் நேற்று இரவு எரிவாயுவை கோரி வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதன் போது இடையில் வந்த இரண்டு வாகனங்களின் சாரதிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாகனங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமையினால் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

சாரதிகள் வாகனங்களுடன் அங்கிருந்து தப்பி செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அமைதி வழியிலான மக்கள் போராட்டம் அரசாங்கத்திற்கு பெரும் அழுத்தங்களை கொடுத்து வந்தன. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கு இணங்க மக்கள் தமக்குள்ளே மோதிக்கொள்ளும் நிலைமையானது ஆர்ப்பாட்டங்களை முழுமையாக முடக்கும் செயற்பாடாக மாறி வருகிறது.

அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் அரசாங்கத்திற்கு சாதகமான நிலைப்பாட்டை ஏற்படுத்தும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சமகால அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலிமுகத்திடலில் மக்கள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியாகி உள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் எனக் கோரி தொடர் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Tamilwin