சுசிலா: கோமாளி, 2008-ம் ஆண்டு பட்ட அடியிலே, மஇகா தன்னை சுயவிமர்சனத்தோடு மறுசீரமைப்புக்குள்ளாக்கி ஒரு புதிய பொலியுடன் பவனி வருகிறதா?
கோமாளி: மஇகா என்பது அம்னோ இந்தியர்களுக்கு கொடுத்துள்ள வாகனம். அதற்கு எண்ணெய் ஊத்துவது, எப்படி ஓட்டுவது, யார் ஓட்டுவது, எங்கே ஓட்டுவது, எப்போ பிரேக் போடுவது, பழுது பார்ப்பது இப்படி எல்லாவற்றையும் அம்னோதான் செய்யும்.
இதை ஓட்டுபவர்கள் கள்ள சவாரி அடித்து சம்பாதிக்கலாம். எண்ணெய்யை திருடலாம். சொகுசு சுயதேவைக்காக சுற்றுலா போகலாம். அவ்வளவுதான்.
இதைத்தவிர அதைக்கொண்டு சமுதாயத்தை உயரிய நிலைக்கு கொண்டு செல்ல அதை ஓட்டுபவர்கள் ஆசைப்பட்டாலும் செய்ய இயலாது.
அமைதிப்பேரணி மசோதாவை சட்டமாக்கும் செய்கையின் மூலம் அம்னோ தனது இனவாத உண்மை நிறத்தை பகிரங்கமாக வெளிக்காட்டியது. மஇகா பற்களை இளித்துக்கொண்டு ஆதரவு நல்கிறது.
சுசிலா, சுயவிமர்சனமும் மறுசீரமைப்பும் அம்னோவுக்கு எட்டாக்கனிகள்.
நடந்துமுடிந்த அம்னோ பேரவையில், நமது ஒரே மலேசியா தந்தையின் உரையிலும், அதை ஒட்டி நடந்த விவாதங்களிலும் மலேசியா என்பது அம்னோவின் நாடாகவே திகழும் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
எங்கும் எதிலும் அம்னோவின் கட்டுப்பாடும் ஆதிக்கமும் தேவை என்பதை அப்பேரணி பலத்த கரவோசையோடு ஏற்றது.
ஒரே மலேசியாவின் புட்டியில் இருந்து அம்னோ என்ற இனவாதப் பூதம் கிளம்பியதை வானவேடிக்கை என மகிழ்ந்து, ம.இ.காவினர் கைதட்ட வேண்டும் என்பதுதான் நியதி.
சுசிலா, ம.இ.கா வாகனத்திற்கு அம்னோ அதிக எண்ணெய் கொடுத்துள்ளதாம். தற்போது அதை ஓட்டுபவர்கள் புதிய பொலியுடன் பவனி வருகிறார்களாம். கிடைத்த வரைக்கும் சோரம் போவது புதிதல்லவே!