13 ஆண்டுகள் கடந்து விட்ட போதும், அந்த மே18ஆம் நாள் அரங்கேறிய முள்ளிவாய்க்காலின் அவலங்கள், எம் நெஞ்சங்களை நெக்குருகச் செய்கின்றன.
சிறியோரும் பெரியோரும் பிள்ளைகளுமாய், எம்மக்கள் உணவுக்காக ஏங்கி நின்றமையை முள்ளிவாய்க்கால் கஞ்சி மூலம் நாம் நினைவுகூருகிறோம் என ரவிராஜ் சசிகலா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யுத்தத்தின்போது சரணடைந்தவர்கள், உறவுகளால் கையளிக்கப்பட்டவர்கள், படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் என்று பலரின் நினைவுகளை சுமந்த படி வலி நிறைந்த உள்ளத்தோடு நீதிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் நம் மக்களின் மனங்களை ஆண்டுதோறும் கூர் வாளொன்று ஊடுருவிச்செல்லும் நாள் மே18.
காணாமற்போன, தம் உறவுகளைத் தேடிப் போராடி வருடக்கணக்கில் வாதாடி, வாடி வதங்கி, நிர்க்கதியாகி நிராசையோடு கண்களை நிரந்தரமாய் மூடிக்கொண்ட எம்மவர்கள் பலர்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் அதைத்தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளும், எல்லா வினைக்கும் எதிர்வினை உண்டு, அப்பாவிகள் சிந்திய இரத்தத்தின் சத்தம் இறை சந்நிதானத்தில் ஓங்கி ஒலிக்கும் என்ற பழமொழிகளை எமக்கு நினைவுபடுத்துகின்றன.
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை, அரசு கையாளும் பாங்கு, மகள் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொற்குடம் என்பது போலவே காணப்படுகிறது. எமது இளைஞர்கள், தம்மை வன்முறைகளில் ஈடுபடுத்தாது ஒதுங்கியிருந்தமை அவர்களின் முதிர்ச்சியையும் பொறுமையையும் எமக்கு உணர்த்தி நிற்கிறது.
எமது உறவுகளை நினைவுகூரும் இந்நாளில், தற்போது நிலவும் சூழலில், நாம் அனைவரும், கட்சி பேதமின்றி சுயநல அரசியல் தவிர்த்து, ஒற்றுமையாக ஓரணியாக செயற்படுவோம். எம் மக்களின் கண்ணீருக்கு நாமே பொறுப்பாளிகள்!
IBC Tamil