பயணிகளின் பாதுகாப்பிற்காக பேருந்துகளில் தேவையற்ற பயணப்பொதிகளை எடுத்துச் செல்வதை முற்றாக தடை செய்ய இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பயணிகள் தமது பைகளை பொதிகள் வைக்கும் இடங்களில் வைக்காமல் அவற்றை தம்வசம் வைத்திருக்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான கெமுன விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் சில நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தலாமென இந்திய உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையுடன் மீண்டும் எங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
எனவே பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்றுமாறு பேருந்து ஊழியர்களுக்கு சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
சந்தேகத்திற்கிடமான பொதிகள் மற்றும் பேருந்துகளில் செல்பவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பயணிகள் தங்களுடைய பாதுகாப்பையும், ஏனையவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு மீண்டும் அறிவுறுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து ஹிந்து ஊடகம் வெளியிட்டிருந்த செய்திக்கு பாதுகாப்பு அமைச்சு மறுப்பு தெரிவித்துள்ளது.
குறித்த செய்தி முற்றிலும் ஆதாரமற்றவை என பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளதுடன் அத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து தமக்கு உளவுத்துறை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையெனவும் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Tamilwin