ஹோட்டல் தங்குமிட வசதிகளை கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஹோட்டல் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.

நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்காக கொழும்பில் தங்குவதற்கு ஹோட்டல் ஒன்றை முன்பதிவு செய்யுமாறு தன்னிடம் கோரியுள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார்.

இதேவேளை, நாரஹேன்பிட்ட பொலிஸ் போக்குவரத்து பிரிவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது.

எவ்வாறாயினும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

Tamilwin