தமிழ் மக்களுக்கு சர்வதேச உதவிகள் வழங்கப்பட வேண்டும்: கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்

13 வருடங்கள் போரினால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வை மேம்படுத்த தொடர்ச்சியாகப் போராட வேண்டியிருக்கும் தமிழ் மக்களுக்கு சர்வதேச உதவிகள் வழங்கப்பட கனடா முன்னணியிலிருந்து செயற்பட வேண்டும் என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் சரே தெரிவித்துள்ளார்.

13 ஆவது வருட முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நினைவு தினத்தை முன்னிட்டு ஜான் சரே விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவித்துள்ளதாவது,

18, 2022 ரொறோண்டோ, ஒன்ராறியோ – இன்றைய நாள், ஒன்ராறியோ மாகாணத்தின் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரத்தின் இறுதி நாளாகும்.

சுமார் 40 முதல் 70 ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா. தரவுகள் உறுதிப்படுத்தும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்று இத்துடன் 13 வருடங்கள் நிறைவுபெறுகிறது.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நீதி வழங்கப்பட வேண்டுமென்று கனேடிய தமிழ்ச் சமூகம் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்து வரும் இந்த வேளையில், நாங்களும் அவர்களுடன் இணைந்து, அவர்கள் எதிர்நோக்கும் நீதி மற்றும் நிறைவு வழங்கலைப் பெற்றுக்கொடுப்பதற்குத் துணைபோக வேண்டியவர்களாகவுள்ளோம்.

சாதகமான சூழல் அமையும் தருணத்தில், வெற்றிகரமான புலம்பெயர் தமிழர் சமூகம், கனேடிய தமிழர் சமூகம் ஆகியவற்றுடன் இணைந்து அவர்களது உறவுகளின் புனர் வாழ்வு, மீள்கட்டமைப்பு விடயங்களுக்கு உதவக் கனடாவும் தயாராக இருக்கிறது.

நீதிக்கானதும், சமாதானத்தை முன்னெடுப்பதற்கானதும், கனடாவில் உள்ளதைப் போன்ற அதிகாரப் பகிர்வுடனான கட்டமைப்பைத் தமிழர் பிரதேசங்கள் பெறும் நோக்குடன் கூடிய நீண்ட காலத் தீர்வுகளுக்காகவும், தோளோடு தோள் நிற்பதோடு, போர்க்குற்றவாளிகள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எமது நாட்டுக்குள் காலடி எடுத்து வைப்பதைத் தடுக்கவும் கனடா முன்வர வேண்டும்.

இந்த நேரத்தில், இக்கொடிய போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தப்பிப்பிழைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களையும் நாம் மறந்துவிடக்கூடாது.

13 வருடங்கள் முடிவுற்றும், போரினால் விதவைகளாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெண்களும், உடல், மனச் செயற்பாடுகளை இழந்தவர்களும், குறிப்பாகக் குழந்தைகளும், தமது வாழ்வை மேம்படுத்த தொடர்ச்சியாகப் போராட வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு சர்வதேச உதவிகள் வழங்கப்பட வேண்டுமென்பதோடு, அதை முன்னெடுப்பதில் கனடா முன்னணியிலிருந்து செயற்படவும் வேண்டும்.

பல தசாப்தங்களாகப் பின் தொடரும் துன்பங்களின் வடுக்களை நினைவுகூர்ந்து அவற்றை ஆற்றுவதற்கு முயற்சித்துவரும் தமிழர் சமூகத்துடன் நான் என்றும் துணை நிற்பேன் என்பதோடு எனது ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும் என்பதையும் உறுதி கூறுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

Tamilwin