ரணிலின் உயிர் பசிலிடம்: இலங்கையை ஆட்சி செய்யும் இருவர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள இருப்போர் பற்றிய தகவல்களை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க வெளியிட்டுள்ளார்.

மாத்தளையில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவண்ண, சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் திங்கள் கிழமை அமைச்சு பதவிகளை ஏற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் பிரதமராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கவின் உயிர் பசில் ராஜபக்சவிடம் இருக்கின்றது. மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக ராஜபக்சவினரை பாதுகாப்பதற்காக ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தனர்.

மக்கள் நிராகரித்த இரண்டு தலைவர்களே தற்போது நாட்டை ஆட்சி செய்து வருகின்றனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு செல்லுமாறு மக்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ரணில் விக்ரமசிங்கவை மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மக்கள் எதிர்பார்ப்பதை இவர்கள் இருவரால் செய்ய முடியாது.

தற்போது அரசாங்கம் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்து வருகிறது. பழைய மோசடியான அரசியலை இவர்கள் மீண்டும் செய்து வருகின்றனர் எனவும் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.

 

 

Tamilwin