இலங்கைக்கு உதவப் போவதாக அறிவித்துள்ள இந்தியாவும் ஜப்பானும்!

டோக்கியோவில் பிரதமர்கள் நரேந்திர மோடி மற்றும் ஃபுமியோ கிஷிடா இடையே சமீபத்தில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து, நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவுவதற்கு இந்தியாவும் ஜப்பானும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஜப்பானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மோடியும் கிஷிடாவும் மே 24 ஆம் திகதியன்று குவாட் உச்சிமாநாட்டுக்கு புறம்பாக சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்பை அடுத்து தகவல் வழங்கிய, ஜப்பானின் வெளிவிவகார அமைச்சு, இலங்கையின் நிலைமை குறித்து இரண்டு தலைவர்களும் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் நாட்டில் மனிதாபிமான நிலைமை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இரண்டு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்பட இரண்டு தலைவர்களும் உடன்பட்டதாகவும் ஜப்பானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக, ஜப்பான் இலங்கை்கான சிறந்த நன்கொடையாளர்கள் மற்றும் மேம்பாட்டு பங்காளராக செயற்பட்டு வருகிறது.

இருப்பினும் அதன் மானியங்கள் மற்றும் முதலீடுகள் சீனா அல்லது இந்தியாவை விட மிகக் குறைவாகவே உள்ளன.

முன்னதாக அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய குவாட் உறுப்பினர்கள் வெளிநாட்டு உதவிக் கூட்டமைப்பை அமைப்பதில் முன்னணி வகிக்க வேண்டும் என்ற இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முன்மொழிவுக்குப் பின்னர், இலங்கைக்கு உதவ இந்தியாவுடன் இணைந்து ஜப்பான் வெளியிட்ட அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து இந்தியா சுமார் 3.5 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

 

 

Tamilwin