இந்த நாட்டில் உள்ள திருடர்களுக்கு ஆதரவளிக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திருடர்களுக்கும் எதிர்காலத்தில் இந்த மாவட்டத்தில் இடமளிக்ககூடாது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – கறுப்பங்கேணியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று நாட்டில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இன்று மக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு வரிசையில் நிற்கும் நிலையே உள்ளது. இன்று சில பொருட்களை காசு கொடுத்து வாங்க முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
நாட்டிற்கு பிரதமர் தேவையா?
ஓகஸ்ட் மாதமளவில் பாரியம் பஞ்சம் ஏற்படும் என்று புதிய பிரதமர் கூறியுள்ளார். அடுத்த மூன்று மாதங்களில் மக்கள் வாழ்நாளில் காணாத துன்பத்தினை அனுபவிக்கபோவதாக அமைச்சர்கள் சொல்கின்றார்கள். இதனை சொல்வதற்கு அமைச்சர்கள் இந்த நாட்டுக்கு தேவையா? இதனை சொல்வதற்கு ஒரு பிரதமர் தேவையா?
தற்போதைய நிலைக்கு காரணம் தற்போதைய ஜனாதிபதி என்பது அனைவருக்கும் தெரியும்.அதனால் தான் கோட்ட வேண்டாம் என்ற போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எவ்வளவு கூறியும் வெட்கம்,மானம்,ரோசம் அற்றவர் அப்படியே பதவி விலகாமல் இருக்கின்றார். இன்று இந்த மக்கள் படும் அவலகங்களுக்கு கோட்டபாயவுடன் இணைந்து இந்த மாவட்டத்தினை சேர்ந்த ஒரு இலட்சம் மக்களும் இந்த அவலங்களுக்கு பொறுப்புகூற வேண்டும்.
ஜனாதிபதியெடுத்த ஒவ்வொரு தீர்மானமும் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது. அதற்கு இங்கு ஒரு இலட்சம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு வழங்கினார்கள். இதேபோன்று ஜனாதிபதியினால் பெரிய முதலாளிகளுக்கு வரி சலுகைகள் வழங்கப்பட்டன. அதனால் அந்த சுமையினை மக்கள் சுமக்கும் நிலையேற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
Tamilwin