எதிர்பார்த்ததை விட விரைவில் தேர்தல் நடத்தப்படலாம்: கொழும்பு அரசியலில் இணக்கமின்மை

இலங்கையில் விரைவில் தேர்தல் ஒன்று நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதியினால் பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார்.

எனினும் அவர் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதை விடுத்து, அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை முன்கொணர்வதில் அக்கறை செலுத்தி வருவதாக, அரசாங்கக் கட்சியான பொதுஜன பெரமுன குற்றம் சுமத்தியுள்ளது.

அத்துடன் 21 ஆவது திருத்தம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான பசில் ராஜபக்சவுக்கு எதிரான (வெளிநாட்டு குடிமகன்) அம்சத்தை கொண்டிருப்பதால், 21ஆவது திருத்தம் தொடர்பில், அந்த கட்சிக்குள், ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

இதனையடுத்து இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார்.

இந்திரஜித் – நந்தலால்

இதேவேளை மத்திய வங்கியின் ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமியை நியமிக்கவேண்டும் என்று ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தி வருகின்ற நிலையில், தாம் நியமித்த நந்தலால் வீரசிங்கவுக்கு ஜனாதிபதி தமது பூரண ஆதரவை வெளியிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் கோட்டாபயவுக்கும் ரணிலுக்கும் இடையில் இணக்கமின்மை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் இன்று புதிய அமைச்சரவையின் இரண்டாவது கூட்டம் நடைபெறுகின்றது. இதில், இந்த முரண்பாடுகளின் தோற்றங்களை காணக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க, 21ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் தெரிந்துகொண்ட பின்னர், 21ஆவது திருத்தத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்ல ரணில் எதிர்பார்க்கிறார்.

ஏற்கனவே முதலாவது அமைச்சரவையில் இந்த திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டு, மேலதிக திருத்தங்களுக்காக கட்சி தலைவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் நகர்வும் இன்று அமைச்சரவையில் விவாதிக்கப்படவுள்ளது.

இதேவேளை ஏனைய கட்சிகளும் இந்த விடயத்தில் தொடர்ந்தும் விவாதித்து முடிவைக்காண்பதில் தாமதித்துக்கொண்டிருப்பதால், இணக்கமின்மை என்ற அடிப்படையில் எதிர்பார்த்ததை விட விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று அரசியல் தரப்புக்கள் எதிர்வை தெரிவித்துள்ளன.

 

 

Tamilwin