இலங்கை சுதந்திரம் அடைந்த போது ஆசியாவில் எமது நாடு பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தில் இருந்தது.ஜப்பான், மலேசியா போன்ற நாடுகள் முதலாம் இரண்டாம் நிலைகளில் பொருளாதாரத்தில் காணப்பட்டன.
தற்போது இலங்கை வங்காளதேசம், தமிழ் நாட்டு மாநில அரசு போன்றவற்றில் கடன், உதவிகளை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி
இலங்கை சுதந்திரமடைந்த நாளில் இருந்து இன்று வரை நாட்டை ஆட்சி செய்தவர்கள் செய்கின்றவர்கள் சிங்களத் தலைவர்களேயாவர். சோல்பரி யாப்பின் மூலமாக இந்த நாட்டுக்கான பொதுத்தேர்தல் முதன் முதலாக 1947 இல் நடைபெற்றது. அத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது. அதன் தலைவர் டி.எஸ்.சேனநாயக்க பிரதமர் ஆனார்.
இந்த அமைச்சரவையில் பண்டாரநாயக்க அவர்களும் பொறுப்புள்ள அமைச்சராக இருந்தார். அக்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தோன்றவில்லை. இலங்கை சுதந்திரம் அடைந்த போது ஆசியாவில் எமது நாடு பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்தில் இருந்தது.ஜப்பான், மலேசியா போன்ற நாடுகள் முதலாம் இரண்டாம் நிலைகளில் பொருளாதாரத்தில் காணப்பட்டன.
தற்போது இலங்கை வங்காளதேசம், தமிழ்நாட்டுமாநில அரசு போன்றவற்றில் கடன் உதவிகளை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.பொருளாதாரத்தில் நமது நாடு மோசமாக நலிவடைந்துள்ளது.
அந்நியச் செலாவணியின் டொலர் கையிருப்பு
வங்காள தேசம் றிசேவ் வங்கியில் அந்நியச் செலாவணியான டொலர் கையிருப்பு 30 பில்லியன் டொலராக இருக்க, இலங்கையில் டொலர் கையிருப்பு 0.05 பில்லியன் டொலர்கள் மட்டுமே உள்ளது.இந்த புள்ளி விபரம் ஒன்றே போதும் நாட்டின் நலிவான பொருளாதாரத்தைக் எடுத்துக்காட்டுவதற்கு, பொருளாதா சமூக ஐக்கிய அரசியல் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு பல்லின மக்கள் மத்தியில் பலமான ஒற்றுமை அவசியமாகும்.அந்த ஒற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டியது தலைவர்களின் பாரிய பொறுப்பாகும்.
நாட்டை அழிவுப் பாதையில் கொண்டு சென்று குட்டிச்சுவர் ஆக்கியுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்தனா, இந்நாள் ஜனாதிபதி கோட்டபாய போன்ற தலைவர்கள் ஸ்ரீலங்காவவை சிங்கப்பூர் ஆக்க விரும்பினார்கள்.ஆனால் இனவேற்றுமை மதவேற்றுமை மூலமாக அந்த இலக்கை எட்ட முடியாது என்பதை அறியாதிருந்தது தான் வியப்பாகவுள்ளது.
மொட்டின் ஆட்சியில் நம்பிக்கை இழந்த மக்கள்
ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்புவதற்காக மக்கள் 50 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். ஆயினும் 20 மாதங்களில் மக்கள் மொட்டின் ஆட்சியில் நம்பிக்கை இழந்து விட்டனர். ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் நாட்டை ஆண்ட சிங்களத் தலைவர்கள் நாட்டின் சமூக ஐக்கிய ,பொருளாதார, அரசியல் அபிவிருத்தியில் தோல்வி கண்டது மட்டுமே வரலாறாகவுள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண்பதும், புலம்பெயர் மனித வளங்களையும், வல்லுனர்களையும் அவர்களது முதலீடுகளையும் பயன்படுத்துவதுதான் இந்த நாட்டுக்குள்ள சாத்தியமான செயற்பாடுகளாகும். மாறாக அந்நிய நாடுகளுக்கு நாட்டின் வளங்களை விற்பதன் மூலம் நாட்டை அடிமைத்துவ நிலைக்கே கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
Tamilwin