அதிரடியாக கைது செய்யப்பட்டார் துமிந்த சில்வா!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சற்றுமுன்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

துமிந்த சில்வா திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொது மன்னிப்பு இடைநிறுத்தம் 

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட அரச தலைவரின் பொது மன்னிப்பை இடைநிறுத்தி இலங்கை உயர் நீதிமன்றம் நேற்று (31) இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதன்படி துமிந்த சில்வாவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், இந்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உதவி மற்றும் ஆலோசனை வழங்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், துமிந்த சில்வாவுக்கும் வெளிநாடு செல்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொண்டு நாடு திரும்பிய அவர் வழமை போன்று ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் துமிந்த சில்வா சற்று முன்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

 

IBC Tamil