ரஷ்யாவுடன் முறுகலை தவிர்க்க கடும் முயற்சியில் இலங்கை!

ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் உயர்மட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், விமானம் தடுத்து நிறுத்தப்பட்டதற்கான நீதிமன்ற வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை இன்று மாலை வெளியிடவுள்ளார்.

இதற்கிடையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விமானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ரஷ்ய விமானச் சேவை நிறுவனமான Aeroflot மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமானங்களைத் தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளது.

ரஷ்ய ஏரோஃப்ளோட் ஏ330 ரக விமானம் இலங்கையை விட்டு வெளியேறுவதைத் தடுத்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை தடை உத்தரவை பிறப்பித்தது.

அயர்லாந்து விமான நிறுவனம் ஒன்றினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க, பிரதிவாதியான ரஷ்ய விமான சேவைக்கு இந்த தடை உத்தரவை பிறப்பித்தார்.

இந்தநிலையில் தடை உத்தரவை நீக்குமாறு ஏரோஃப்ளோட்டின் கோரிக்கையை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் எதிர்வரும் புதன்கிழமை பரிசீலிக்கவுள்ளது. குத்தகை கொடுப்பனவில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

Tamilwin