இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய விமானம் தொடர்பான சிக்கலைத் தீர்த்தமைக்காக இலங்கை அதிகாரிகளுக்கு ரஷ்ய விமானப் போக்குவரத்துக்கான பெடரல் முகமை (ரோசாவியட்சியா) தனது நன்றிகளை தெரிவித்துள்ளது.
ஏரோஃப்ளோட் விமானம் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்த உத்தரவை இலங்கை நீதிமன்றம் இன்றைய தினம் இடைநிறுத்தியது. சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு மேல் வர்த்தக நீதிமன்றம் பரிசீலித்ததை அடுத்து இந்த உத்தரவு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த விமானம் கொழும்பில் இருந்து மாஸ்கோவிற்கு புறப்பட்டதை ஏரோஃப்ளோட் நிறுவனம் உறுதிப்படுத்தியது.
“மாஸ்கோ நேரப்படி 15:52 மணிக்கு (12:52 GMT), ஏரோஃப்ளோட் ஏர்லைனின் ரஷ்ய பதிவுக் குறியான RA – 73702 இன் கீழ், ஏர்பஸ் A330-343 விமானம், இன்றைய தினம் கொழும்பு விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், மாஸ்கோவிற்குப் புறப்பட்டது.
இப்பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்விற்காக இலங்கை விமானப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய அரச திணைக்களங்களின் தலைமைத்துவத்திற்கு ரஷ்ய விமானப் போக்குவரத்து முகவர் நிறுவனம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது” என ரோசாவியட்சியா அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜூன் 2ம் திகதி கொழும்பில் இருந்து மாஸ்கோவிற்கு புறப்படவிருந்த ஏரோஃப்ளோட் ஏர்பஸ் ஏ330-300 விமானம் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய தடுத்து வைக்கப்பட்டது.
அயர்லாந்து நிறுவனமான Celestial Aviation Trading Limited நிறுவனம் தாக்கல் செய்த முறைப்பாட்டினை விசாரித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்கவினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த தடை உத்தரவு வரும் எதிர்வரும் 16ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த தடையுத்தரவு இடை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து இன்றைய தினம் விமானம் மொஸ்கோவிற்கு பயணித்தது.
எவ்வாறாயினும், விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கையிடம் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு அண்மையில் கூறியிருந்தது. இலங்கையின் தூதுவர் ஜனித அபேவிக்ரம லியனகேவை நேற்று தமது எதிர்ப்பை ரஷ்ய வெளியுறவு அமைச்சு தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.